Breaking
Mon. Jan 13th, 2025

மன்னர் காலம்தொட்டு மதிக்கப்பட்டு வந்த ஒவ்வொரு சமூகங்களினதும் தனித்தனி கலாசாரங்கள், மரபுரிமைகள், வழக்காறுகள் தொடர்ந்தும் பேணப்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

“ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற பரவலான கருத்தாடல்களும் சொற்பிரயோகங்களும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு அச்சுறுத்தலாக அமையாமல் இருக்கும் வகையில், புதிய அரசின் செயற்பாடுகளும் கொள்கை அமுலாக்கல்களும் அமைய வேண்டுமென அவர் மேலும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று (21) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

“ ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்பது பற்றியும், ஜனாதிபதி தனது கொள்கை விளக்க உரையில் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய சில உறுப்பினர்களும் இதையே வலியுறுத்தினர்.

இந்த நாட்டில் “எல்லோருக்கும் ஒரே சட்டம்தான்” இருக்கிறது என்பதை அனைவரும் அறிவீர்கள். ஆனால், இந்த வாசகம் வெவ்வேறு பிரிவினருக்கு, வெவ்வேறு சட்டம் இருப்பது போன்ற தோற்றப்பாட்டை தோற்றுவித்துள்ளது. அது பிழையான சிந்தனையாகும். வெவ்வேறு சமூகங்களின் சமூக, கலாச்சார மரபுகளோடு சம்பந்தப்பட்ட, அந்த மக்கள் தொன்றுதொட்டு பேணி வருகின்ற விடயங்கள் மன்னர் காலத்திலிருந்தே அங்கீகரிக்கப்பட்டுள்ளவை என்ற உண்மையை, இந்த உயரிய சபை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றினால்தான் அந்தந்த சமூகங்களுக்கு பாதிப்பில்லாத முறை மன்னர் காலத்திலிருந்து நடைமுறையில் இருந்து வருகின்றது.

இவ்வாறு காலாகாலமாக பழக்கத்திலிருந்து வந்த வழக்காறுகள், மரபுரிமைகள் டச்சுக்காரர்களின் காலத்தில் தொகுக்கப்பட்டன. பின்னர், அவற்றுக்கு சட்ட வடிவம் கொடுக்கப்பட்டு, இன்று அவை தனியார் சட்டங்களாக அடையாளம் காணப்படுகின்றன. இவை சட்ட வடிவத்திலே காணப்பட்ட போதும் காலாகாலமாக பேணப்பட்டு வந்தவைகளாகும். இவற்றை “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற பிரமையின் கீழ் கைவைக்க முற்படுவது, அந்தச் சமூகங்களின் கலாச்சார மரபுகளின் மீது கைவைப்பதற்கு ஒப்பானதாகும். இவ்வாறான மரபுகளில் கைவைக்க முனைவது, ஒரு சமூகத்தின் நடைமுறையை மற்றொரு சமூகத்தின் மரபுகளில் திணிக்க முயல்வதாகும். அத்துடன், இது சர்வதேச சாசனங்கள் வரையறுத்துள்ள சமய, கலாச்சார உரிமைகளை மீறுவதாகும். ஒரு சமூகம் தனது மரபுகளை மாற்ற வேண்டுமா? இல்லையா? என்பதை, அந்தந்த சமூகங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்ற உண்மையை அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

எனவே, “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற போர்வையில், சிறுபான்மைச் சமூகங்களின் தனித்துவத்தில் அத்துமீறி சட்டங்களை திணிக்க முயல்வது, நாகரீகமான அல்லது ஜனநாயக செயற்பாடாக அமையாது என்பதை இந்த உயர் சபையில் சொல்லிவைக்க விரும்புகின்றேன்.

19 வது திருத்தத்தை முற்றிலும் ஒழிப்பதாக அல்லது 20 வது திருத்தத்தின் மூலம், அதில் மாற்றங்களை கொண்டுவரப் போவதாக கூறப்பட்டுள்ளது. எனினும், இதிலுள்ள சுயாதீன ஆணைக்குழு உள்ளடங்கலான, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் அம்சங்களை பாதுகாக்க வேண்டியதும் நமது பொறுப்பாகும்.

புதிய திருத்தத்தின் பின்னர், மீண்டும் ஒரு அரசியலமைப்புத் திருத்தம் உருவாகக்கூடிய நிலைமை ஏற்படாத வகையில், உத்தேசத் திருத்தமானது நாட்டுக்கும் எதிர்கால சந்ததிக்கும் நிரந்தரமான நிம்மதியை பெற்றுத்தர வேண்டும்.

பல்லினச் சமூகங்கள் வாழுகின்ற நாட்டில், ஏனைய சமூகங்களின் கௌரவம், மத உரிமை, கலாச்சார விழுமியங்களை பேணும் வகையிலும், அவற்றை உறுதிப்படுத்தும் முறையிலுமான விடயங்கள், புதிய திருத்தத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.

அதேபோன்று, தேர்தல் திருத்தங்களை கொண்டுவர வேண்டுமென கூறப்பட்டுள்ளது. தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும்போது, நாட்டின் இன, மத விழுமியங்களை மனதில் கொண்டு, அந்தந்த சமூகங்களின் வீதாசாரங்களுக்கு ஏற்ப, பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்பட வேண்டும்.

சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க வேண்டுமென சிந்திக்கும் சில சக்திகள், ஜனநாயகத்தை குழிபறிக்கும் சிந்தனையுடனேயே தொழிற்படுகின்றன என்பதே எனது கருத்தாகும்.

எனவே, மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசு, புரையோடிப்போயுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணாமல், இனிமேலும் காலங்கடத்தினால், நாட்டுக்கு அது நஷ்டமாகவே அமையும்” என்றார்.

Related Post