Breaking
Mon. Dec 23rd, 2024
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை, இன்னும் இன்னும் விமல் வீரவன்ச தொடர்புபடுத்துவது அபத்தமான செயற்பாடென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாவிதன்வெளி அமைப்பாளரும் கட்சியின் உயர் பீட உறுப்பினருமான சித்தீக் நதீர் குறிப்பிட்டுள்ளார்.
 
விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர், அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
இரண்டு கடவுச்சீட்டுக்களை வைத்துக்கொண்டு நாட்டின் சட்டத்தை மீறிய அமைச்சர் விமல் வீரவன்ச, மக்கள் காங்கிரஸ் தலைவரின் பெயரை உச்சரிக்கக் கூட தகுதியற்றவர்.
 
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர், ஈஸ்டர் தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாகவும், அதன் பின்னர் அவர் தனது சகோதரருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதாகவும், பின்னர் அவர் சஹ்ரானுக்கு அழைப்பை மேற்கொண்டதாகவும், இந்த விடயத்தை மதிப்பிற்குரிய கர்தினால் அவர்களிடம், பொலிஸார் தெரியப்படுத்தியதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
 
விமலின் இந்த அப்பட்டமான பொய்களுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் CID யில் முறைப்பாடும் செய்துள்ளார்.
அதேவேளை, குறித்த தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக, இந்த அரசாங்கம் நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையிலும், மக்கள் காங்கிரஸ் தலைவர் தொடர்பில் குற்றச்சாட்டுகள் எவையும் சுமத்தப்படவில்லை.
 
இவ்வாறு இருக்கும் போது, இன்னும் இன்னும் ஊடகங்கள் முன் தோன்றி, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை விமர்சிப்பதை, அமைச்சர் விமல் பழக்கமாக்கிக் கொண்டுள்ளார். இதனை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
 
சிங்கள மற்றும் கிறிஸ்தவ மக்களை முஸ்லிம் சமூகத்துடன் மோதவைக்கும் நோக்குடனேயே விமல் வீரவன்ச இவ்வாறு தொடர்ந்து செய்து வருகின்றார். இதன்மூலம் அரசியல் செய்யும் நோக்கம் அவருக்கு இருப்பது தெளிவாக தெரிகிறது.
இந்த அர்ப்பத்தன அரசியலை கைவிடுவது, அவருக்கு மட்டுமன்றி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
 
இன, மத வேறுபாடுகள் துறந்து அரசியல் செய்யும் ரிஷாட் பதியுதீனை தலைவராகக் கொண்ட மக்கள் காங்கிரஸில், சிங்கள, தமிழ் மற்றும் கிறிஸ்தவ மக்கள் அங்கத்தவர்களாகவும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாகவும் உள்ளார்கள் என்பதை, அற்பத்தனமான செயலில் ஈடுபடும் விமல் வீரவன்ச போன்றோர் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Post