Breaking
Mon. Dec 23rd, 2024

வில்பத்து காடழிப்பு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செயயப்பட்டுள்ளதாகவும், அந்தத் தீர்ப்பில் வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

புத்தளத்தில் இன்று (10) இடம்பெற்ற கூட்டத்தில், வில்பத்து காடழிப்பு வழக்கு தொடர்பில் ஊடகவியளாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

“1990 ஆம் ஆண்டு வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட பின்னர், சுமார் 20 வருடங்களாக தத்தமது கிராமங்களுக்கு மீளக் குடியேற முடியாத சூழ்நிலை இருந்தது. யுத்தம் முடிந்த பின்னர், அவர்கள் தமது கிராமங்களில் மீண்டும் சென்று வாழ விரும்பினர். அந்தவகையில், மன்னாருக்கும் புத்தளத்துக்கும் இடையிலான எல்லைப் பகுதியில், மன்னார் மாவட்டத்தின் இருக்கும் மறிச்சுக்கட்டி, பாலைக்குளி, கரடிக்குளி, முள்ளிக்குளம் ஆகிய கிராம மக்களும் தமது கிராமங்களுக்கு சென்றபோது, அவர்கள் வாழ்ந்த பாரம்பரிய இடங்கள் காடுகளாக காணப்பட்டன. எனவே, அவற்றை துப்புரவு செய்து அங்கு மீளக் குடியேறினர்.

அவர்கள் குடியேற்ற காணிகள் போதாதிருந்ததினால் அரச அனுமதியுடன், முறையான வகையில், ஜனாதிபதி செயலணியின் வழிகாட்டலில், அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரின் ஒப்புதலுடன், அவர்களில் சிலருக்கு குடியேற்றத்துக்கென அரச காணிகளும் வழங்கப்பட்டன.

இந்தக் குடியேற்றத்தை இனவாதிகளும் சில ஊடகங்களும் பெரிதுபடுத்தி, பெரும்பான்மை மக்களை பிழையாக வழிநடத்தினர். திட்டமிட்டு பிரசாரங்களை மேற்கொண்டு, அங்குள்ள மக்களுக்கு பல்வேறு இன்னல்களையும் ஏற்படுத்தினர். அந்தக் குடியேற்றத்துக்கு எதிராக நீதிமன்றில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, அந்தத் தீர்ப்புக்கு எதிராகவே உச்ச நீதிமன்றத்தை நாம் நாடியுள்ளோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Video: https://fb.watch/4UXAeKVxaG/

Related Post