பிரதேசத்தை மிக நேசித்த ஒரு ஆத்மா இன்று நம்மை விட்டுப் பிரிந்துவிட்டது என அல்ஹாஜ் கே. எம். முஹைதீன். (லெப்பை ஹாஜியார்) இன் மறைவையிட்டு, மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
“லெப்பை ஹாஜியார் ஓர் அரசியல் போராளி மட்டுமன்றி, விசால மனங்கொண்ட ஒரு சமூகப் போராளியாகவும் திகழ்ந்தவர். உதவி, உபகாரம் செய்வதில் முன்னின்று செயற்பட்டவர். அவர் நோயுற்று ஒதுங்கும் வரை சமூகப் பணிகளை முன்னெடுத்தவர். சதா காலமும் இயங்கிய மனிதர்.
என்னோடு இணைந்து, பல சமூக விடயங்களில் இரவு, பகல் பாராது பங்கெடுத்துக் கொண்டவர். கல்குடா பிதேசத்தின் அரசியல், சமூகவியல், சமூகப் பாதுகாப்பு என்று துணிந்து முன்னின்று இயங்கிய போராளி.
கல்குடா பிரதேசத்தில் மட்டுமன்றி, முழு நாட்டு அரசியல் தலைவர்களுக்கும் அறிமுகமான ஒரு மனிதர்.
தடுப்புக் காவலில் இருந்து வெளியே வந்த எமது கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்கள், தமது கல்குடா வருகையின்போது, லெப்பை ஹாஜியாரை மறக்காமல் சுக நலம் விசாரித்தது, இதற்கு நல்ல உதாரணமாகும்.
சமூகப் பணியில் என்னுடன் மிக நெருக்கமாகக் கைகோர்த்திருந்த அன்னாரின் மறைவு வேதனையளிக்கிறது. கல்குடாத் தொகுதியை நேசித்த ஆத்மா அமைதியடைந்துவிட்டது.
அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர், அவரது ஆதவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதுடன், அன்னாரை எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக்கொள்ளவும் பிரார்த்திக்கின்றேன்.