அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், பிரபல சமூக சேவையாளருமான சகோதரர் அப்துல் ரஸாக் (நளீமி) அவர்களின் மறைவு குறித்து தான் ஆழ்ந்த கவலையடைவதாகவும், அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ள சிரேஷ்ட சட்டத்தரணியும் மக்கள் காங்கிரஸின் சட்ட ஆலோசகருமான ருஸ்தி ஹபீப், அன்னாரது இழப்பால் துன்புற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த கவலையினையும் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மர்ஹூம் அப்துல் ரஸாக் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையின் முதற் தர கலாசாலைகளில் ஒன்றான பேருவளை ஜாமிய்யா நளீமாவில் கல்வி பயின்று, பல சமூக சார்ந்த விடயங்கள் மூலம் திருமலை மாவட்ட மக்கள் மனதில் இடம் பிடித்த மர்ஹூம் றஸாக் அவர்கள், அரசியல் ரீதியாக சிறுபான்மை மக்களுக்கு பணியாற்ற முன்வந்த ஒருவராவார்.
மக்கள் பணியினை சிறப்பாக செய்த அவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் கீழ் இருந்த கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று பணிப்பாளராகவும் பணியாற்றி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்பினை ஆற்றியுள்ளார்.
அவர் ஒரு சிறந்த ஆழுமை. எப்போதும் புன்னகைத்த முகத்துடன் பணிகளை முன்னெடுக்கும் இயல்பான பண்புகளை கொண்டவர். அன்னாரின் சுவன வாழ்வுக்காக தான் பிரார்த்திப்பதாக சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.