வாழைச்சேனை நிருபர்
கல்குடாத் தொகுதியில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தமிழ் முஸ்லீம் மக்களின் குடியிருப்புக் காணிகளுக்கான காணி அனுமதிப் பத்திரங்களை மிக விரைவில் பெற்றுத் தருவதாக மகநெகும தலைவர் கே.கே.டி.ரணவக்க தெரிவித்தார்.
பயங்கரவாத எதிர்ப்பு மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நாட்டில் ஏற்பட்ட நிலையான சமாதானத்தை ஏற்படுத்திய அரசாங்கத்திற்கும் இராணுவத்தினருக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் பேரணியும் மிக நீண்ட காலமாக காணி அனுமதிப் பத்திரம் கிடைக்காமல் இருக்கும் காணிகளுக்கு காணி அனுமதிப் பத்திரம் கிடைக்க வேண்டும் என்று மகஜர் கையளிக்கும் நிகழ்வும் இன்று (19) வெள்ளிக்கிழமை ஓட்டமாவடி நாவலடி பிரதேசத்தில் இடம் பெற்ற போது அந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
‘இப் பகுதியில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் குடியிருப்புக் காணிகளுக்கான அனுமதிப்பத்திரம் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கையினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொடர்பு கொண்டு மேற்கொள்வதுடன் இப் பகுதிகளுக்கான அடிப்படை வசதிகளையும் செய்து தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் தெரிவித்தார்.
இதன்போது காணி அனுமதிப் பத்திரம் மற்றும் மக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பாக பொதுமக்களால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
பயங்கரவாத எதிர்ப்பு மக்கள் பேரவையின் தலைவர் எம்.ஐ.ஹில்மி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் நெடுஞ்சாலைகள் துறைமுக அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகர் எம்.ஜே.எம்.அன்வர், பயங்கரவாத எதிர்ப்பு மக்கள் பேரவையின் இணைப்புச் செயலாளர் ஜிப்ரி கலந்தர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் வாழைச்சேனை, ஓட்டமாவடி, வாகரை, கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான தமிழ் முஸ்லீம் மக்கள் கலந்து கொண்டனர்.