Breaking
Fri. Dec 27th, 2024

இர்ஷாத் றஹ்மத்துல்லா

தற்போது பெய்துவரும் மழையினை அடுத்து புத்தளம் மாவட்டத்தில் புத்தளம், கருவலகஸ்வௌ, நவகத்தேகம மற்றும் முந்தல் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் இந்த மழையினையடுத்து தாள் நிலப்பகுதிகளே அதிகமான இந்த பாதிப்புக்களை எதிர் கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புத்தளம் மாவட்ட இணைப்பு அதிகாரி கேர்ணல் பத்மசிறி தலுவத்த கூறினார்.

அதே வேளை புத்தளம் மாவட்டத்தில் நவகத்தேகம பிரதேச செயலகப் பிரிவில் 170 குடும்பங்களும், முந்தல் பிரதேச செயலகப் பிரிவில் 475 குடும்பங்களும், புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் 30 குடும்பங்களும், கருவலகஸ்வௌ நீலபெம்ம பிரதேச பிரிவில் 50 குடும்பங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும், இன்னும் பாதிப்புக்குள்ளான விபரங்கள் பெறப்பட்டுவருவதாகவும் அவர் கூறினார்.

இதே வேளை தப்போவ தம்பபண்ணி கிராமம் நீரில் மூழ்கியுள்ளதால் அங்குள்ள மக்களை கடற்படைகளின் படகுகள் கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்படும் பணிகள் தற்போது இடம் பெறுவதாக அவர் மேலும் கூறினார்.

அதே வேளை தப்போவ, தெதுரு ஓய, இராஜாங்கணை, நீர்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

புத்தளத்தில் இருந்து எலுவலங்குளம் ஊடாக மன்னாருக்கு செல்லும் பாதை மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் மேலும் தெரிவித்துள்ளது.

பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தேவையான சமைத்த உணவுகள் வழங்கப்படுவதாக பிரதேச செயலாளர்கள் கூறினர்.

புத்தளம் நகரப்பகுதியில் தில்லையடி மற்றும் நூர் நகர் பிரதேசம் என்பன நீரில் மூழ்கியுள்ளதாகவும், கடல் மட்ட நீர் அதிகரித்துள்ளதால் வெள்ள நீர் வழிந்தோடுவதில் தாமத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அந்த நிலை மாறிவருவதாகவும் புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.

சில பகுதிகளில் கட்டிட நிர்மாணத்துக்கென கொண்டுவரப்பட்ட கற்கள் காண்களை மறைத்திருப்பதால் சில அடைப்புக்கள் காணப்பட்டதாகவும், அதனை துரித கதியில் சரி செய்ய நகர சபை நடவடிக்கையெடுத்ததாகவும் புத்தளம் நகர சபை தலைவர் கூறினார்.

பாதிக்கப்ட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் தற்காலிகமாக மாற்று இடங்ககளில் தங்கிக் கொள்ளுமாறும், அவர்களுக்கு தேவையான சமைத்த உணவுகளை வழங்க நடவடிக்கையெடுக்குமாறு தலைவர் பாயிஸ் பிரதேச செயலாளர் உள்ளிட் சமூக சேவை அதிகாரிகளிடம் வேண்டுகோள்விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அதே வேளை புத்தளம் கடையாக்குளம், நூர் நகர பகுதிகளில் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களை இன்று சென்று பார்வையிட்டதாக புத்தளம் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.எம்.எம்.முஹ்ஸி மற்றும் தொழிலதிபர் அலி சப்ரி, முன்னால் நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.றபீக் ஆகியோர் தெரிவித்தனர்.

Related Post