பிராந்திய நலன்களிலும், பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் நோக்குகளிலும் இணைந்து செயற்படுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் புதிய ஆளுநர்களை வாழ்த்தி அவர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“வடக்கு, கிழக்கு மாகாணங்களின் புதிய ஆளுநர்களான திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் சிறுபான்மை சமூகங்களின் பூர்வீகத்திலுள்ளவர்கள். இதனால், எமது மக்களின் அபிலாஷைகள் பற்றி புதிதாக இவர்களுக்கு எதையும் சொல்ல வேண்டியதும் இல்லை.
வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் அன்றாட மற்றும் அடிப்படை பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை உள்ளது. இவற்றில், போரின் வடுக்களால் ஏற்பட்ட தேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். இடப்பெயர்வு, மீள்குடியமர்தல், காணிகளின் உரித்துக்களைப் பெறுதல், வாக்குரிமை மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு ஆகிய திட்டங்களில் ஆளுநர்களுடன் இணைந்து செயற்படலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.