Breaking
Fri. Dec 27th, 2024

பி. முஹாஜிரின்

அம்பாறை மாவட்டத்தில் மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு ஆயிரக் கணக்கான வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்கையும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில், திருக்கோவில், லகுகல, பானாமை, அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில். நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, நட்பிட்டிமுனை, நாவிதன்வெளி, மருதமுனை ஆகிய பிரதேசங்களில் மக்களின் குடியிருப்பு வீடுகள் பல நீரில் மூழ்கியுள்ளதாலும் வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதாலும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.

சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதோடு, பலர் உறவினர் வீடுகளில் தங்கியிருப்பதாகவும், தொடர்ந்தும் சில இடங்களில் மக்கள் இடம்பெயரக்கூடிய நிலை காணப்படுவதாகவும் பிரதேச செயலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அநேகமான உள்வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதோடு, உள்ளுர் போக்குவரத்துக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தாம்போதிகளிலும் வாய்க்கல்களிலும் நீர் பெருக்கெடுத்துள்ளன. தொடர்ச்சியான மழை பெய்து வருவதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அதிகமான நெல்வயல்கள் நீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. விவசாயிகளின் வேளாண்மை பராமரிப்பு நடவடிக்கைகளும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கடல் கொந்தளிப்பாக இருப்பதனால் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் கடற்றொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நன்னீர் மீன்பிடித்தொழிலும் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளதுடன் அன்றாட தொழிலாளர்களின் நாளாந்த தொழில் நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளன.

சில பிரதேசங்களில் வடிகான்கள் துப்பரவு செய்யப்படாமலுள்ளதால் மழை நீர் வடிந்தோட முடியாத நிலை காணப்படுகின்றது. சில பிரதேசங்களில் இயந்திரங்கள் மூலம் வாய்க்கால்கள் தோண்டப்பட்டுள்ளபோதிலும் முறையாக நீர் வழிந்தோடவில்லையென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மழை நீர் தேங்கியுள்ள வடிகால்களை துப்பரவு செய்து மழை நீர் வழிந்தோட முடியாதவாறு தேங்கி நிற்கும் இடங்களிலிருந்து நீரை வடிந்தோட செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் சம்பந்தப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் மழை தொடருமாயின் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதோடு பொதுமக்கள் இடம்பெயரும் நிலை அதிகரிக்கக்கூடும் எனவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

Related Post