இன்று வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், சகல பாடங்களிலும் அதி விஷேட (A) சித்திகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களையும் மற்றும் உயர்தரத்தில் கற்பதற்கான தகுதியை பெற்றுக்கொண்ட மாணவர்களையும் மன மகிழ்வுடன் வாழ்த்துவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான M.S.S.அமீர் அலி தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்தள்ளதாவது,
“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்” என்ற வள்ளுவன் வாக்கிற்கொப்ப, எமது மாணவச் செல்வங்களின் இவ்வாறான சாதனைகளை கேள்வியுறும் போது, இதற்குத் தானும் ஒரு காரணமாய் இருந்திருக்கின்றோம் என்ற எண்ணம் உண்மையிலேயே பேருவகை தருகிறது.
கடந்த காலங்களில் எமது மாணவர்களின் சாதனைகள் வெளித்தெரியாது இன்னுமொரு வலயத்துக்குள் புதையுண்டு மறைக்கப்பட்டுப் போன வரலாறுகள் ஏராளம். ஆனால், இன்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உருவாக்கத்தின் பின் மாவட்டத்திற்கும், தேசத்திற்கும் எமது பிள்ளைச் செல்வங்களின் திறமைகள் தனித் தனியே வெளிப்படுத்திக் காட்டப்படுவதன் ஊடாக, கல்விப் புலத்தில் எமது சாதனைகள் மிக உயர்நிலையை அடைந்து வருவதனை எல்லோராலும் தெளிவாகத் தெரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
இதன் தாக்கம், பதினாறு வருடங்கள் கடந்த பின்பும் இன்றும் இத்தனி வலய உருவாக்கம் தொடர்பான விமர்சனங்கள், புலம்பல்கள் நாட்டின் உயர் சபையில் கூட பேசப்படும் விடயமாக அமைந்திருப்பதை காணமுடிகிறது. எத்தகைய எதிர்வினைகள் வந்தாலும் அவற்றை எதிர்கொள்வது என்கின்ற நிலைப்பாட்டிலேயே இக் கல்வி வலய உருவாக்கத்தை முன்னெடுத்தேன். அது இன்று பலன் தருவதை கண்கூடாக காணும் பெரும்பேற்றை தந்த வல்ல இறைவனைப் புகழ்கின்றேன்
மாவட்டத்தில் நிர்வாகப் பயங்கரவாதம் தொடர்பாகப் பேசுகின்ற எம்மவர்கள் கூட, இதில் உள்ள தனிப்பட்ட மற்றும் சில நிர்வாக அசௌகரியங்களுக்காக இத்தனி கல்வி வலய உருவாக்கம் தொடர்பில் விமர்சனங்களை முன் வைப்பதை நான் அறிவேன். ஆனாலும் ஒட்டுமொத்த சமூகத்தின் கல்வி நலன் தொடர்பாக சிந்திக்கும் கல்விப் புலத்தோர் மற்றும் சமூக சிந்தனையாளர்கள் மத்தியில், இத்தனிக் கல்வி வலய உருவாக்கத்தின் அனுகூலம் தொடர்பாக எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்காது என்பதே எனது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்” எனத் தெரிவித்துள்ள அவர், மேலும் எமது மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்காக இக் கல்வி வலயம் சிறப்பான பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்
சிறப்பான பெறுபேறுகளை இம்மாணவர்கள் பெறக் காரணமான மதிப்பிற்குரிய ஆசிரியப் பெருந்தகைகள், வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கிய அதிபர்கள், கல்வியதிகாரிகள் மற்றும் ஊக்கப்படுத்திய பெற்றோர்கள் அனைவரையும் பாராட்டி நினைவு கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.