Breaking
Fri. Dec 27th, 2024

கடும் மழையை அடுத்து பிரதான நீர்த்தேக்கங்கள் சிலவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.விக்டோரியா, ரன்தெனிகல மற்றும் ரன்டெம்பே அகிய நீர்த்தேக்கங்களில் தலா இரண்டு வான் கதவுகள் வீதம் திறக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எஸ்.எச்.முதித்த மஞ்சுல கூறியுள்ளார்.இதனால் குறித்த நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் மகாவலி கங்கையை பயன்படுத்துவோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தல்  விடுத்துள்ளார்.

மழைக் காரணமாக மகாவலி திட்டத்திற்குரிய கண்டலம, கலாவாவி, நாச்சாதீவு, இராஜாங்கனை, நுவரவாவி, திசாவாவி, உல்ஹிட்டிய மற்றும் ரத்கிந்த ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 99.8 வீதம் வரையும், மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 93.9 வீதம் வரையும், கொத்மலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் 82.6 வீதம் வரையும் மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் 96.9 வீதம் வரையும் அதிகரித்துள்ளது.

இதேவேளை, நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான பிரதான 72 நீர்த்தேக்கங்களில் 43 நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே வான் பாயத் தொடங்கியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவுப் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன கூறியுள்ளார்.

ஒருசில நீர்த்தேக்கங்களின் அபாய நிலையை கட்டுப்படுத்தும் வகையில் அவசர வான் கதவுகள் திறக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையில் 490 கைதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.சிறைச்சாலைக்கு செல்லும் வீதியில் சுமார் ஐந்தடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திர ரத்ன பல்லேகம கூறியுள்ளார்

வெள்ளத்தில் சிக்கியுள்ள கைதிகளுக்கு தேவையான உணவு வகைகளை வழங்கி அவர்களை வேறொரு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான விசேட செயற்றிட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் சிலர் வெள்ளம் காரணமாக நேற்று வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Post