மீராவோடை, அமீர் அலி வித்தியாலயத்தின் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இன்று (16) மீராவோடை, அமீர் அலி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியதுடன் மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
இங்கு கருத்து தெரிவித்த அவர்,
“மிக நேர்த்தியாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விழா நிகழ்வுகள், பாடசாலையின் வளரச்சியை புடம் போட்டுக் காட்டுவதாக அமைந்திருந்தமை பாராட்டத்தக்கது. அதற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அதிபர் எம்.மஹ்ரூப் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரையும் இத் தருணத்தில் மனமாரப் பாராட்டுகின்றேன்.
கல்வி வலயத்தை ஆரம்பிக்கும் போது எனக்கிருந்த எதிர்பார்ப்பை போலவே இவ் அமீர் அலி வித்தியாலயத்தை ஆரம்பிக்கும் போதும் பாரிய எதிர்பார்ப்பு எனக்குள் இருந்தது. அது இன்று நிறைவேறிக் கொண்டிருப்பதை காணும் போது மிக்க மனநிறைவு ஏற்படுகின்றது.
இன்று, பரிசில்கள் பெறும் பதினைந்து மாணவர்கள் போன்று, எதிர்காலத்தில் இன்னும் அதிகமதிகம் பேர் சித்தியடைந்து, இப்பாடசாலைக்கும் மீராவோடை பிரதேசத்துக்கும் பெருமை சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்” என்று கூறினார்.