ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆளுந்தரப்பிலிருந்து விலகி எதிரணி பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு தீர்மானித்து விட்டார். அதன்படி இன்று (22) எல்லாம் நடந்து முடிந்து விட்டன. தனது அமைச்சுப் பதவியையும் அவர் இராஜினாமா செய்து விட்டார்.
இவையெல்லாம் இன்று பகலுடன் நடந்து பரபரப்பு அடங்கிய நிலையில் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அப்போது அவர் என்னிடம் தெரிவித்த சில கருத்துகளை மனதை நெருடச் செய்தன.
மிக சக்திமிக்க அமைச்சுப் பொறுப்பை ராஜினாமாச் செய்து விட்டேன். எனக்கு வழங்கப்பட்டிருந்த அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்பு தரப்பினர் இனி எனக்கு இல்லை. அனைத்தையும் எனது சமூகத்துக்காகவே துறந்துள்ளேன். இனி எனது பாதுகாப்பு உட்பட அனைத்தும் இறைவனிடம்தான் உள்ளன என்று தெரிவித்தார்.
அவர் கூறிய போது எனது மனம் நெகிழ்ந்து விட்டது. உண்மைதான். இந்த அரசாங்கத்தின் அமைச்சுகளில் மிகவும் சக்திவாய்ந்த அமைச்சுகளில் ஒன்றே ரிஷாத்துக்கும் வழங்கப்பட்டிருந்தது. நியாயமான அளவு அதிகாரங்களுடன் சுயமாக தீர்மானங்களை அவரால் மேற்கொள்ளக் கூடியதாகவும் அவரது அமைச்சு இருந்தது. அமைச்சர் ஹக்கீமின் அமைச்சுடன் ஒப்பிட்டு நோக்கும் போது ரிஷாத்துக்கு வழங்கப்பட்டிருந்த வழங்கல்களையும் அதிகாரங்களையும் கொண்டிருந்தது,
இவற்றையெல்லாம் துறந்து விட்டு வெளியே வருவது என்றால் அது உண்மையில் அவர் தான் சார்ந்த சமூகத்தின் மீதான வெறித்தனம் என்ற கூறலாம். வேறு எந்த உள்நோக்கமும் இல்லையென்பது என்னைப் பொறுத்த வரையில் நிரூபிக்கப்பட்ட உண்மை.
முஸ்லிம் சமூகத்துக்காவே அவர் அனைத்தையும் இழந்துள்ளார். அமைச்சராக இருந்த போது கூட முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த்தால் அவர் வேண்டப்படாத ஒருவராக மோசமான விமர்சனத்துக்கு உட்பட்டவராகவும் காணப்பட்டார்.
எனவே அவர் தொடர்பில் எவரும் வேதனையான கருத்துகளையோ, விமர்சனங்களையோ வெளியிடுவது நல்லதல்ல என நினைக்கிறேன். எங்களுக்காக அனைத்தையும் இழந்த ஒருவரை நாமே விமர்சிப்பது நல்லதும் அல்ல.
இதேவேளை, அந்தக் கட்சியின் முக்கியஸ்தரும் பிரதியமைச்சருமான எம்.எல.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வை நான் தொடர்பு கொண்டு ஏன் இந்த துரோகத்தனம் என்று நேரடியாகவே கேட்டேன். அவர் அதற்கு இவ்வாறு பதிலளித்தார். ”இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எந்தத் துரோகத் தனத்தையும் அநியாயத்தையும் செய்யவில்லை. தேவையான அனைத்தையும் எமது சமூகத்துக்குச் செய்கிறார். எனவே நான் என்றும் ஜனாதிபதியுடனேயே இருப்பேன். அரசாங்கத்தை விட்டும் செல்லவேமாட்டேன்” என்று கூறினார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளரான இன்றைய எதிரணி பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன அந்தக் கட்சியிலிருந்து விலகிய போது அவர் வகித்த சுகாதாரத்துறை அமைச்சு பதவி பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் செலயலாளராகவிருந்து ஆளுந்தரப்புக்குச் சென்ற திஸ்ஸ அத்த நாயக்கவுக்கு வழங்கப்பட்டது.
இதேபோன்று சகோதரர் ரிஷாத் பதியுதீன் வகித்த அமைச்சுப் பொறுப்பு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கப்படலாமென்றும் கதைகள் அடிபடுகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்.