Breaking
Thu. Nov 14th, 2024

மக்கள் மீது ஒருபோதும் இல்லாத அக்கறை மற்றும் கரிசனைகளை, சிலர் தேர்தல் காலங்களில் வெளிப்படுத்துவது ஏன்? எனக் கேள்வியெழுப்பிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், இவ்வாறு கரிசனை என்ற போர்வையில் சமூகத்தின் காலைவாரிவிட சதி நடப்பதாகவும் தெரிவித்தார்.

மன்னார், முசலி – கொண்டச்சி பிரதேசத்தில் இன்று (05) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்ததாவது,

“எதுவானாலும் எமக்கான குரல், எமக்கான உரிமை என்று இருக்க வேண்டும். சமூகங்கள் ஆபத்தில் மாட்டிவிடும்போது, அவசரமாகக் குரல்கொடுப்பது நமக்கான தலைமைகளே! அபிவிருத்திகளிலும் அக்கறையுடன் செயற்படுவதற்கு நமக்கென தலைமைகள் இருப்பது அவசியம்.

பாடசாலைகள் இல்லாமல், மாலை நேரங்களிலும் காலை நேரங்களிலும் பள்ளிக்கூடங்கள் நடத்தப்பட்டன. வைத்தியசாலைகள் இல்லாது மக்கள் கஷ்டப்பட்டனர். மீளக்குடியமர்வதற்கு காணிகள் இல்லாது மக்கள் தவித்தனர். இந்த நிலைமைகளைப் போக்கியது யார்? எமக்கான தலைமைகளே. முத்தலிப்பாவா, ஹுனைஸ் பாரூக், நூர்தீன் மசூர், எம்.எச்.எம்.அஷ்ரஃப் மற்றும் நானுட்பட, சமூகத்துக்கு பல சேவைகள் செய்வதற்கு இதுவே காரணமாகியது.

இதனால், எமது பிள்ளைகள் இன்று வைத்தியர்களாக, பொறியியலாளர்களாக, கணக்காளர்களாக, உலமாக்களாக, சிறந்த வியாபாரிகளாக மற்றும் சமூகத்தில் நல்ல பல துறைகளில் மிளிர்கின்றனர். இந்த உயர்ச்சிக்கு காரணகர்த்தாக்களாக அமைந்தது நமக்கான தலைமைகளே!

இன்று இவ்வாறான தலைமைகளை அழிப்பதற்கே திட்டம் தீட்டப்படுகிறது. இந்த சதிகள் பற்றி மக்கள் தெளிவுடன் செயற்பட வேண்டும். அற்ப, சொற்ப சலுகைகளுக்காக சோரம்போனால், நமது எதிர்காலத்தை நாமே தொலைத்தது போல ஆகிவிடும்.

இத்தேர்தலில், எந்த சலுகைகளுக்கும் நீங்கள் விலைபோகக் கூடாது. சொந்தக் காலில் நிற்பதற்காக, நமக்கான தலைமைகளை வென்றெடுக்க வாக்களிக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.

Related Post