கடந்த மார்ச் 8 ஆம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் 370 என்ற ஜெட் விமானம், சீனாவின் பீஜிங் நகருக்கு சென்ற போது மாயமானது. மாயமான அந்த விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்றும், பயணிகள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. விமானத்தை தேடும் பணியில், ஆஸ்திரேலியா, சீனா மற்றும் மலேசியா நாட்டை சேர்ந்த மீட்பு குழு ஈடுபட்டது.ஆனால் அந்த முயற்சி தோல்வியை அடைந்தது. இன்று வரை விமானம் என்ன ஆனது என்ற மர்மம் நீடித்தே வருகிறது.
இந்நிலையில் மாயமான மலேசிய விமானத்தை அமெரிக்க ராணுவமே சுட்டு வீழ்த்தியது என்று என்று ப்ரோடியஸ் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை அதிகாரியும், எழுத்தாளருமான மார்க் துகாய்ன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வானொலி ஒன்றில் கூறுகையில், விமானம் கடத்தப்பட்டது என்று வெளியான தகவலை அடுத்து, தீவிரவாதிகள் விமானத்தை கடத்தி தாக்குதலுக்கு பயன்படுத்தலாம் என்ற அச்சத்தில் அமெரிக்க ராணுவம் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது. இந்திய பெருங்கடலில் உள்ள டீகோ கார்சியா தீவு அருகே அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும் டீகோ கார்சியா தீவில் வசிப்பவர்கள் தண்ணீரில் காலியாக இருந்த தீ அணைப்பானை கண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.