நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து ஜனாதிபதியின் பதவிக்காலம் நான்கு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்படுமெனத் தெரிவித்திருக்கும் எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலம் ஒரு தடவையாக மட்டுமே இருக்கும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். கொழும்பு வர்த்தகக் கண்காட்சி மண்டபத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற தேசிய ஐக்கிய அமைப்பின் முஸ்லிம் சமூக ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உலக நாடுகளில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 4 அல்லது ஐந்து வருடங்களேயாகும். எமது நாட்டில் மட்டுமே அது ஆறு வருடங்களாக உள்ளது. நான் பதவிக்கு வந்ததும் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 4 வருடங்களாகக் குறைப்பேன். அத்துடன் ஒரு தடவைக்கு மேல் பதவி வகிக்கவும்மாட்டேன். ஜனாதிபதி பதவியை அலங்காரமாகப் பயன்படுத்தவும் மாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து பேசுகையில்;
‘நான் இன்று அல்லாஹ்வின் போதனையையும் நபிகளாரின் வழிகாட்டலையும் பின்பற்றும் முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் இங்கு உரையாற்றிக் கொண்டிருக்கின்றேன். இலங்கையிலும் உலகளாவிய மட்டத்திலும் முஸ்லிம் சமூகம் உன்னத நிலையில் காணப்படுகின்றது. நாட்டுப்பற்றுடன் கூடிய ஒரு சமூகமாகவே இந்தச் சமூகம் விளங்குகின்றது. அண்மைக்காலத்தில் இந்த அரசின் சில தீய சக்திகள் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக பல அநியாங்களை மேற்கொண்டதை வெளிப்படையாகவே காணக்கூடியதாக இருந்தது.
இதனை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த நான் இணங்கமாட்டேன். அநீதி இழைக்கப்பட்ட சமூகத்துக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பேன். நான் பதவியேற்ற நேரம் முதல் இன, மத, மொழி, பேதங்களுக்கு இடமளிக்கமாட்டேன். எனது ஆட்சியில் அனைத்து இனமக்களையும் சரிசமமாகவே நோக்குவேன். இலங்கையர், மனிதர்கள் என்ற அடிப்படையில் மாத்திரமே பார்ப்பேன்.
எனது ஆட்சியின் முதற்பணி வறுமை ஒழிப்பே ஆகும். வறுமை ஒழிப்புக்கே முன்னுரிமை கொடுப்பேன். பசியால் வாடும் மக்களுக்கு நகர அலங்காரங்கள் தீர்வாகப் போவதில்லை. முதலில் பசிப்பிணியை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். அதன் பின்னரே அபிவிருத்தியில் கவனம் செலுத்த முடியும். வறுமை ஒழிப்புத் திட்டத்தோடு சுகாதாரம், கல்வி, வீட்டுப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்படும். மத சுதந்திரம் அனைவருக்கும் பொதுவாக இருக்கும். மத சுதந்திரத்தில் எவரும் கை வைக்க இடமளியேன். அச்சம், பீதியில்லாத நாடாக இலங்கை மாற்றியமைக்கப்படும் மைத்திரி அரசியல் அலை வீசத் தொடங்கியதன் பின்னர் மக்களின் பயம் நீங்கிவருவதைக் காண மகிழ்ச்சியாகவே உள்ளது.
எனது தேர்தல் விவகார சட்ட ஆலோசகராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் பணியாற்றுவது குறித்து நான் பெருமைப்படுகின்றேன் எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சட்டத்தரணி சுஹைர் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம்.முஸம்மில் உட்பட முக்கிய முஸ்லிம் பிரமுகர்களுடன் பெருந்தொகையான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.