-அனா-
பேருவளையில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களைப் பார்த்து முனாபிக் என்று சொல்லியுள்ளார் நாங்கள் அவரை விட்டு விலகியதால் அவர் பயப்பட்டதாலயே அவ்வாறு பேசுகின்றார் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னியின் ஜனாதிபதி வேட்பாளர் மைதிரிபல ஸ்ரீசேனவை ஆதரித்து சனிக்கிழமை (27.12.2014) ஓட்டமாவடியில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
எங்களை முனாபிக் என்று ஜனாதிபதி சொல்கிறார் அவரை இவ்வாறு சொல்லுமாறு அஸ்வர் ஊதிக் கொடுக்கிறார் தான் சிங்கள சமுகத்திடம் மன்னிப்புக் கோருகிறேன் என அஸ்வர் சொல்லியிருக்கும் செய்தி எனக்கு சிரிப்பாக இருந்தது இந் நாட்டு முஸ்லீம் மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்துள்ள ஒரு பெரும் உதவிதான் அஸ்வர் அவர்களின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பரித்ததாகும் அஸ்வர் பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு அவர் செய்த செயல்கள் ஒட்டு மொத்த முஸ்லீம்களுக்கும் அபகிருத்தியை ஏற்படுத்தி வந்தது அதை அவர் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தப் போராட்டத்தில் சமுகத்தின் நலனிற்காகவே எங்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தும் அதனைப் பொருட்படுத்தாது சமுகம்தான் முக்கியம் என்று இத் தேர்தலில் களம் இறங்கியுள்ளோம்.
மைதிரிபால ஸ்ரீசேனவுக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்ற தீர்மானத்தை எமது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தீர்மானத்தை எடுப்பதற்கான கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எமது கட்சியின் தலைவர் றிஸாட் பதியுதீன் பிரதி அமைச்சர் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களை கொழும்புக்கு வருமாறு அழைத்தார் அவர் வர முடியாது என்று சொல்லிவிட்டு அவரோடு கலந்தாலோசிக்க வில்லை என்று அபாண்டமாக பொய்ப் பிரச்சாரம் செய்கின்றார்.
இந்தப் போராட்டத்தில் எம்மோடு கரம் சேருங்கள் என அவருக்கு அழைப்பு விடுத்தோம் அவர் எம்மிடம் சொன்னார் தான் சவுதி மற்றும் குவைத் அரசாங்கத்தோடு செய்திருக்கும் அபிவிருத்திப் பணிகளை என்னாள் கைவிட்டு விட்டு உங்களோடு இணைய முடியாது மஹிந்த ராஜபக்ஷ வெற்றியடைந்தால் என்னால் அரசியல் செய்ய முடியாது போய் விடும் என்னை அவர்கள் சிறைக்கு அனுப்பி விடுவார்கள் அதனால் மைதிரிபால ஸ்ரீசேனவை ஆதரிக்க என்னாள் வரமுடியாது என்று கூறினார்.
இந்தப் போராட்டத்தில் எம்மோடு இணையுங்கள் என்று கூறியதற்கு இப்படியெல்லாம் காரணங்களைக் கூறிவிட்டு இன்று எனக்கு எதுவும் தெரியாது றிஸாட் பதியுதீன் தன்னிச்சிசையாக மடத்தனமான முடிவை எடுத்து விட்டார் என்று நாடகமாடுகிறார்.
இலங்கை மக்கள் இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று நிச்சயம் வேண்டும் என்று முடிவுடன் மைதிரிக்கு வாக்களிக்கத் தீர்மானித்து விட்டார்கள் எங்களைப்படைத்த இறைவனைத் தவிர நாங்கள் வேரு எவருக்கும் பயப்படுவது கிடையாது இன்று தங்களுக்கு மஹிந்தவால் ஏதும் நடந்து விடும் என்று பயப்படுபவர்களைப் பார்த்து இறைவனுக்கு பயந்து கொள்ளுமாறும் மறுமை நாளை நினைவு படுத்திக் கொள்ளுமாரும் கேட்கிறேன்.
ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ முதன் முறையா ஜனாதிபதி தேர்தலில் 2005ம் ஆண்டு போட்டியிட்ட போது அவருக்காக தேர்தல் பிரச்சாரங்களை தனது உயிரை பணயம் வைத்து மேற் கொண்டவன் இந்த அமீர் அல் மாத்திரம்தான் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடுபடும் ஹிஸ்புல்லாஹ், கருனா அம்மான், பிள்ளையான், அலிஸாஹிர் மௌலானா எவரும் முன்வரவில்லை மட்டக்களப்பு மாவட்டத்தில் அவரின் பெயரை ஜனாதிபதித் தேர்தலுக்காக அறிமுகப்படுத்தியவன் என்றால் அது நானாகத்தான் இருக்கும் அன்று பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராகத்தான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
நான் இன்று தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொண்டு மைதிரிக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்றது முஸ்லீம் சமுகத்திற்கு துரோகம் செய்து விட்டேன் என்று மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபடும் சிலர் தெரிவிக்கின்றனர் துரொகம் என்ற வசனத்தை பாவிப்பதற்கு அருகதையற்றவர்கலெல்லாம் துரொகத்தைப் பற்றி பேசுவதுதான் கவலையாகவுள்ளது என்றும் தெரிவித்தார்.