கூகுள் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மின்னஞ்சல் சேவையான ‘ஜி மெயிலை’ சீனா முழுமையாக முடக்கியுள்ளது.சீனாவில் கூகுளின் சேவைகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக கணனி வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மூன்றாம் தரப்பு மூலமாக அங்கு ஜி மெயில் உபயோகப்படுத்தப்பட்டு வந்த நிலையில், அதை முழுமையாக முடக்குவதற்கான நடவடிக்கைள் எடுக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் சீனாவில் ‘ஜி மெயிலின்’ பயன்பாடு முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.அதன் பிறகு மிகமிகச் சொற்ப அளவிலான மின்னஞ்சல்கள் ஜி மெயில் மூலமாக சீனாவுக்குள் சென்றுள்ளன.
கடந்த ஜூன் மாதம், டியானமென் சதுக்கத்தில் ஜனநாயக ஆதரவாளர்கள் முன்னெடுத்த போராட்டத்தின் 25 ஆம் ஆண்டு நிகழ்வுகள் அனுசரிக்கப்படுவதற்கு முன்னர், கூகுள் நிறுவனத்தின் மீது சீனா பல தடைகளை விதித்திருந்தது.
கடந்த பல ஆண்டுகளாகவே சீனாவில் இணையதள தணிக்கைகள் கடுமையாக்கப்பட்டிருந்தன.இதன் காரணமாக கூகுள், ஃபேஸ்புக், டிவிட்டர் மற்றும் இதர வெளிநாட்டு இணையதள சேவைகள் அங்கு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.