பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் முதன் முதலாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிக்கும் நடவடிக்கைகளில் நான் நேரடியாக தலையீடு செய்வேன்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் குடும்பத்தார் அரச நிதியை தேவையானவாறு பயன்படுத்த அனுமதிக்க முடியாது. அவ்வாறு நிதியை பயன்படுத்த அனுமதித்த நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவிற்கு முதலில் தண்டனை விதிக்கப்படும்.
ஜயசுந்தரவின் நடவடிக்கைகளினால் கோடிக்கணக்கான ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் பொதுமக்களின் பயணம் விரயமாக்கப்பட்டுள்ளதாகவும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்தவேளையிலேயே பீ.பி.ஜயசுந்தர நிதியமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார். மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியானவுடன், தொடர்ந்து பீ.பி.ஜயசுந்தர நிதியமைச்சு பதவியை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.