Breaking
Sun. Nov 24th, 2024

எம்.ஏ.எம்.பௌசர்
விரிவூரையாளார்
அரசறிவியல் துறை
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
ஒலுவில்.

மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் முடிவடைந்துள்ள இலங்கையின் ஏழாவது ஜனாதிபதித் தேர் தல் தேசிய சர்வதேச மட்டத்தில் அதீத கவனஈர்ப்பினைப் பெற்றுள்ளது. தேர்தல் நடாத்தப்பட்ட பின்புலம் போட்டியாளகள் தேர்தல் முடிவுகள் தேர்தலுக்குப் பிந்திய அரசியல் என சுவாரஷ்யமான பல விடயங்களில் அதன் முக்கியத்துவத்தினைப் பரீசீலிக்க முடியும். எனினும் இக்கட்டுரை ஜனாதிபதித் தேர்தல் பற்றிய சிறு அறிமுகத்துடன் தேர்தலுக்கு பிந்திய அரசியலில் புதிய ஆட்சியின் மீதுள்ள சில சவால்களைக் குறித்துக் காட்டுகின்றது.

புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் விடுக்கப்பட்டது.தேர்தலின் பிரதான போட்டியாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவிக்கப்பட்ட அதேவேளை அவருக்கு எதிரான போட்டியாளரைத் தெரிவு  செய்வதில் எதிர்க் கட்சிகள் சற்றுக் காலம் தாழ்த்தின. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தனியான வேட்பாளா ஒருவரை நிறுத்தும் என சில எதிh;பாh;ப்புக்கள் இருந்தபோதும் இறுதியில் மைத்திhpபால சிறிசேனவின் பொது வேட்பாளார் பற்றிய அறிவிப்புடன் அவ்வெதிர்பார்ப்புக்கள் அனைத்தும் அகன்றுபோயின.

தேர்தலில் அதிகாரத்திலுள்ள ஜனாதிபதிக்கு கடுமையான சவால்களை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட பொதுவேட்பாளார் தேர்தல் முடிவின் போது  அதிகமான வாக்குகளுடன் வெற்றிபெற்றார். இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் அதிகாரத்தில் இருந்த ஜனாதிபதி ஒருவர் தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். தேர்தலில் தோல்வியினைத் தழுவிய முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ 47மூ வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொண்டார்.

இம்முறைத் தேர்தலைப் பொறுத்தவரையில் இனத்துவம் சமயம் ஆகிய காரணிகள் கணிசமான தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தன. தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ சிறுபான்மையினர் அதிகளவு வாழ்கின்ற தொகுதிகளையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெற்றிகொள்ள முடிந்தது. சிங்கள-பௌத்த பெரும்பான்மை மக்கள் செறிவாக வாழ்கின்ற பல தொகுதிகள் அவரால் வெற்றிகொள்ளப்பட்டபோதிலும் அத்தொகுதிகளில் இரு போட்டியாளகளுக்குமிடையிலான வாக்கு வித்தியாசம் குறிப்பிடும்படியானதாக இல்லை.

எனினும் பெரும்பான்மையின சிங்கள-பௌத்த மக்களால் பொது வேட்பாளருக்கு அளிக்கப்பட்ட வாக்குகளின் முக்கியத்துவத்தினை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. குறிப்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் (2010) முன்னாள் ஜனாதிபதி சிங்கள-பௌத்த வாக்காளா;களின் 65மூ ஆதரவினைப் பெற்றிருந்தார். இம்முறைத் தேர்தலில் இவ்விகிதாசாரம் 10மூமாகக் குறைந்திருக்கின்றது.

இவ்வகையில் இத் தேர்தல் பெரும்பான்மை இன சிங்கள-பௌத்த மக்கள் குறித்த ஆட்சியின் மீது கொண்டிருந்த அதிருப்தி சிறுபான்மையினங்களின் மதஇ கலாசார மற்றும் அரசியல் உரிமைகள் மீது விடுக்கப்பட்டிருந்த அச்சுறுத்தல் என்பவற்றுக்கான பிரதியீட்டியினை வழங்கும் சந்தர்ப்பமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தலை அடுத்து புதிய ஜனாதிபதி தமது 100 நாள் வேலைத் திட்டத்திற்கமைய தேசிய அரசாங்கம் ஒன்றினைத் தாபித்துள்ளதுடன் நல்லாட்சியினை உறுதி செய்து மக்களுக்கு நிவாரணம் வழங்கத்தக்க பல்வேறு செயற்பாடுகளிலும் கவனம் செலுத்த முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் வழியாக உதயமாகியிருக்கும் அரசியல் கலாசாரம் வரவேற்கத்தக்கதாயினும் அதன் நடைமுறை முக்கியத்துவம் மிகுந்த சவால்களுக்குரியது. இவ்வகையில் அடையாளம் காணத்தக்க சில முக்கிய சவால்களை இக்கட்டுரையில் காணலாம்.

முதலாவது சவால் ஜனாதிபதிப் பதவி தொடர்பிலானது. அரசியல் சட்ட ஏற்பாடுகளின்படி இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி பலம்வாய்ந்த ஒருவர். எனினும் சிறிசேன ஜனாதிபதியாக்கப்பட்டிருக்கும் புறநிலைச் சூழல் அவரை அவ்வாறு செயற்பட இடமளிக்கப்போவதில்லை. தான் சுதந்திரக் கட்சியில் இருப்பதாக அவ வாதிடுகின்ற போதிலும் தமக்கே உரித்தான அரசியல் கட்சிசார் தளம் எதனையூம் கொண்டிராத மிதக்கும் அரசியல் வாதியாகவே  அவரை நாம் இனம்காணமுடிகின்றது. இந்நிலையில் வெற்றிகரமான ஆட்சியினைக் கொண்டு நடாத்துவதில் அவர் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரி டும். குறிப்பாக எதிர்காலத்தில் இடம்பெறப்போகும் தேசிய மட்டத் தேர்தலில் தற்போதய ஜனாதிபதி அத்தகைய நெருக்கடிகளைச் சந்திக்கலாம்.

புதிய அரசாங்கத்தின் பிரதமர் தொடர்பிலும் சிக்கலான நிலைகளே உள்ளன. அரசியல் திட்ட ரீதியில் பிரதமரின் அதிகாரம் சிறுமைப்படுத்தப்பட்ட ஒன்றாயினும் புதிய தேசிய அரசாங்கத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நிலை சற்றுப் பலமானதுடன் கட்சி ரீதியான தளமும் அவருக்கு உண்டு. எனினும் பாராளுமன்றத்தில் தெளிவான பெரும்பான்மை அவரது கட்சிக்கு இல்லை. இந்நிலையில் பிரதானமான  சுயாதீனமான செயற்பாடுகள் பாராளுமன்றத்தினால் தடைகளுக்குட்படுத்தப்படலாம்.

அடுத்த மிக முக்கியமான சவால் புதிய அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகள் தொடர்பிலானது. ஜனாதிபதி சிறிசேனவுடன் இணைந்திருக்கும் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒரு பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் இணைந்திருக்கின்றன. அப்பொதுவேலைத் திட்டத்தின் மிகவும் பொதுவான அம்சம் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியினை முடிவுக்குக் கொண்டு வருவதாகும். தற்போதைக்கு அது நிறைவேறியிருக்கிறது. ஏனைய விடயங்கள் தொடர்பில் கூட்டணிக் கட்சிகளுக்குள் பொதுவானதும் தனியானதுமான விருப்பங்கள் உள்ளன.

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாளித்துவம்சார்; கொள்கை ஜாதிக ஹெல உறுமயவின் சிங்கள தேசியவாத உணர்வு மக்கள் விடுதலை முன்னணியின் மாக்சீய சிந்தனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்தினை பகிர்ந்தளித்தல் கோட்பாடு முஸ்லிம் கட்சிகளின் முஸ்லிம் மக்களின் மத கலாசார சிவில் உரிமையினை உறுதிப்படுத்துவதற்கான விருப்பம்; மலையகக் கட்சிகளின் மலையக மக்களின் அடிப்படை நலன்களைப் பூர்த்திசெய்தல் தொடர்பிலான ஆர்வம் போன்ற அடிப்படைக் கொள்கைகளில் நின்றும் கூட்டணிக் கட்சிகள் செயற்படுகின்றன. இப்போக்கு அரசாங்கத்தின் நீண்டகால இருப்பு அல்லது கூட்டணிக் கட்சிகளின் தொடர்ச்சியான ஆதரவினை வென்றெடுத்தல் தொடர்பில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கக் கூடும். விசேடமாக புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பதிலிருந்தும் மக்கள் விடுதலை முன்னணி தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்றன விலகி நிற்பது கூட்டணிக் கட்சிகளின் கொள்கை வேறுபாடுகளுடன் தொடர்புடையதாகும்.

பிறிதொருவகையில் அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் கொள்கைத் திட்டங்கள் கூட்டணிக் கட்சிகளால் நிராகரிக்கப்படுவதற்கான வாய்புக்கள் அதிகம் உண்டு. குறிப்பாக முதலாளித்துவ நலன்சாந்த தீர்மானங்களை மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கும் அதேவேளை தமிழர் நலன்களுடன் முரண்படுகின்ற எந்தவொரு தீர்மானத்தினையூம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கப்போவதில்லை. சிறுபான்மையினருடன் அதிகாரத்தினைப் பங்கிட்டுக் கொள்ளும் வேலைத்திட்டத்திற்கு ஜாதிக ஹெல உறுமய தொடர்ச்சியான எதிர்ப்பினைக் காட்டிவந்துள்ளது. இந்நிலையில் தேசிய அரசாங்கத்தின் எதிர்கால நகர்வூ சிக்கலானது என்பதில் ஐயமில்லை.

இங்கு குறிப்பிடத்தக்க மற்றுமொரு முக்கிய சவாலாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் அரசியல் பிரவேசத்தினைக் குறிப்பிடமுடியூம். புதிய அரசாங்கத்தில் வெளிப்படையான பதவிகள் எதனையூம் அவர் பெறவில்லையாயினும் தேர் தல் அரசியலில் கணிசமான பங்களிப்பினை அவர் வழங்கிவந்திருக்கின்றார். மஹிந்த எதிர் அரசியல் உணர்வினால் உருவான அவரது அண்மைய அரசியல் பிரவேசம் புதிய ஆட்சிக்கு அவசியமானதாயினும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினைக் கைப்பற்றுவதற்கு அவர் எடுக்கும் அதீத பிரயத்தனங்கள் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் அதிருப்தியினை உருவாக்கியூள்ளது. இவ்வம்சம் நீண்டகால அடிப்படையில் தேசிய அரசியலில் புதிய மாற்றங்களைத் தோற்றுவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தேசிய அரசாங்கத்திற்கான ஆதரவூ தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருக்கும் திறந்த அழைப்பு அதன் மூலம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினர் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க எடுத்துவரும் முயற்சிகளும் கூட்டணிக் கட்சிகளுக்குள் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியூள்ளன. குறிப்பாக சஜின்வாஸ் குணர்வதன விநாயகமூர்த்தி முரளிதரன் டக்ளஸ் தேவானந்தா தொடர்பில் வெளிப்படையான எதிர்ப்புக்கள் கூட்டணிக் கட்சிக்குள் இருந்து கிளம்பியூள்ளன. நீண்டகால அடிப்படையில் இப்பிரச்சினைகளை கையாழ்வதில் அரசாங்கம் தோல்வியடையக் கூடும்.

அதேவேளை தேசிய அரசியல் நீரோட்டத்தில் தமிழர்; தரப்புக்களை இணைத்து ஆட்சியினைக் கொண்டு நடாத்துவதில் புதிய அரசாங்கம் தொடர்ச்சியான சவால்களை எதிர்கொள்ளும் என்பதில் ஐயமில்லை. சில விட்டுக்கொடுப்புக்கள் தேர்தல் காலத்திலும் தேர் தலுக்கு அடுத்துவந்துள்ள நாட்களிலும் இடம்பெற்றுள்ள போதிலும் அது தற்காலிகமானதே. புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிப்பதிலிருந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விலகியிருப்பது தமிழர் பிரச்சினைக்கான தீர்வினை முன்நிபந்தனையாகக் கொண்டேயாகும். அத்தகையதொரு தீர்வூ அதிகாரத்தினைப் பகிர்ந்தளித்தல் ஊடாக அடையப்படுதல் வேண்டும் என்பதில் அக்கட்சி உறுதியாக உள்ளது.

முஸ்லிம் கிறிஸ்தவ சிறுபான்மை சமுகங்களின் மத கலாசார உரிமைகளை உத்தரவாதப்படுத்துதல் அடுத்த மிக முக்கிய பிரச்சினையாகும். இது தொடர்பில் தேசிய அரசாங்கம் தெளிவான கொள்கை நிலைப்பாட்டுடன் உள்ள போதிலும் ஜாதிக ஹெல உறுமய போன்ற அரசியல் சக்திகளின் அழுத்தங்கள் சிறுபான்மையினரது மத கலாசார உரிமைகளில் சில பாதிப்புக்களை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதேவேளை சிறுபான்மையினரது மத கலாசார உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளும் பெரும்பான்மையின சிங்கள மக்கள் மத்தியில் தவறாக அர்த்தப்படுத்தப்படுவதற்கும் வாய்ப்புண்டு.

பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்புவதிலும் புதிய அரசுக்கு பல நெருக்கடிகள் உள்ளன. கடந்த அரசு கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கையினால் நாட்டின் வருவாய் மூலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் ஏற்றுமதிக்கான சந்தைவாய்ப்புக்கள் பலவூம் அற்றுப்போயூள்ளன் பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான பல மில்லியன்கள் கடனாகப் பெறப்பட்டுள்ளன. அதேவேளை இடைநடுவில் உள்ள பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவேண்டிய பொறுப்பும் புதிய அரசுக்கு உண்டு. திறைசேரி வெறுமையாக்கப்பட்டுள்ள நிலையில் குறுங்காலத்தில் இவற்றினைச் சீர்செய்து மக்களுக்கு நன்மையளிக்கத்தக்க பொருளாதாரக் கொள்கையினை நடைமுறைப்படுத்துவது என்பது அவ்வளவூ எளிதான காரியமன்று. எதிர்கால தேசிய மட்டத்தேர் தலைக் கருத்திற்கொண்டு புதிய அரசாங்கம் பொருளாதார அபிவிருத்திக் கொள்கையில் மக்கள் நலன்பேணும் திட்டங்களை அறிவித்தாலும் நீண்டகால அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் ஆபத்துள்ளது.

மேலும் தொடர்ச்சியான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களினால் தோல்வியூற்றுள்ள நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையினை சீர்செய்ய வேண்டிய கடப்பாடும் புதிய அரசாங்கத்திற்கு உண்டு. எனினும் அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கைகள் மேற்குலகின் நலன்களுக்கு விரோதமாக அமையூமிடத்து வெளியூறவில் புதிய சவால்கள் ஏற்படலாம். அதேவேளை மனித உரிமைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிக்கத்தக்க கொள்கை ரீதியான வேலைத் திட்டங்கள் எதனையூம் அரசாங்கம் முன்னெடுக்கத் தவறும் பட்சத்தில் வெளிநாட்டு அழுத்தங்கள் தவிர்க்கமுடியாததாகும். இருப்பினும் புதிய அரசாங்கத்தின் பிரதான பங்காளியாக ஐக்கிய தேசியக் கட்சி இருப்பதுஇ முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் அரசியல் ஈடுபாடு என்பன அரசாங்கத்தின் வெளியூறவூசார்ந்த நலன்கள் மேற்குலக்குச் சார்பானதாகக் கட்டியெழுப்பப்படுவதனை இயலுமானதாக்கிவிடும்.

அதேவேளை அயல்நாட்டு உறவில் இந்தியா சீனா ஆகிய நாடுகளுடனான உறவினைப் பேணுவதிலும் புதிய அரசு நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்;. சீனாவினை நோக்கிய இலங்கை ஈடுபாட்டினை இந்தியா அதிகம் விரும்பாத ஒரு சூழ்நிலையில் சீனாவூடன் இலங்கை எத்தகைய உறவினைக் கொண்டிருக்கப் போகின்றது என்ற கேள்வி இருக்கின்றது. அதேவேளை நாட்டின் அபிவிருத்திப் பங்காளியாக இணைந்திருக்கும் சீனாவினைத் தவிர்த்து முற்றிலும் இந்தியாவூக்குச் சார்பான ஒரு கொள்கையினை கடைப்பிடிப்பது புதிய அரசுக்கு எந்தளவூ தூரம் சாதகமானதாக இருக்கும் என்ற விடயமும் கவனிக்கத்தக்கது.

முடிவாகக் கூறுவதாயின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைக்கப் பட்டிருக்கும் புதிய அரசாங்கத்திற்கான பாதை மிகவூம் நெருக்கடியானதாகும். இலங்கையின் தொடர்ச்சியாகப் பதவிக்கு வந்த அரசாங்கங்கள் எதிர்கொண்ட சிக்கல்களின் கலவையாக நாம் அதனைப் பார்க்க முடியூம். இச்சிக்கல்களை வெற்றிகொள்வது மிகவூம் இலகுவானதன்று. அதற்கு நிதானமானதும் நன்கு திட்டமிடப்பட்டதுமான நீண்டகால கொள்கை வேலைத் திட்டங்கள் அவசியமாகின்றன. புதிய அரசின் 100 நாட்கள் வரையறுக்கப்பட்ட குறுங்கால வேலைத் திட்டம் மட்டும் போதுமானதன்று. எனினும் அவ்வேலைத் திட்டங்களை ஆரம்பமாகக் கொண்டு நல்லாட்சியினை நோக்கிச் செயற்படுவது தேசிய அரசாங்கத்தின் எதிர்கால வெற்றிக்குப் பங்காற்றத்தக்கதாகும்.
எவ்வாறாயினும் சவால்கள் நிறைந்த தேசத்தின் நல்லாளுகைக்கான பயணத்தில் நீண்டகால அனுபவமிக்க சிறிசேனவின் அரசியல் தலைமைத்துவம் கடந்தகாலங்களிலிருந்து கற்றுக்கொண்டு நாட்டினை வெற்றிப் பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Post