Breaking
Sat. Nov 2nd, 2024

இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக உள்ள தோட்டத் தொழிலாளர்களின் இரு நூறு ஆண்டு கால பழைமை வாய்ந்த லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உத்தரவாதம் அளித்துள்ளார்கள் என துறைமுகம் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கம் நேற்று அட்டனில் ஏற்பாடு செய்திருந்த தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பேசும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

நாட்டில் கடந்த காலங்களில் நிலவிய சூழ்நிலை முற்று முழுதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மலையகம், வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து மக்களும் மிகவும் சந்தோசமாக வாழக் கூடிய உன்னதமான எதிர்காலம் தோன்றியுள்ளது. அதற்கு வாக்களித்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதியினதும், பிரதமரது சார்பிலும் மனமார்ந்த நன்றியறிதலை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இன்றைய ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் அமைச்சர் திகாம்பரம் சந்திப்புகளை மேற்கொண்டபோது, அவர்களின் தனிப்பட்ட தேவைகள் எதையும் கேட்கவில்லை.

அவர் தனது மக்கள் இரண்டு தசாப்த காலமாக வாழ்ந்து வரும் லயன் வாழ்க்கைக்கு விடிவு ஏற்படுவதற்கு ஏழு பேர்ச் காணியுடன் வீடுகளைக் கட்டிக் கொடுத்து கௌரவமாக வாழக் கூடிய வசதிகளைச் செய்து கொடுக்கும்படிதான் கேட்டுக் கொண்டார்.

அதை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் உத்தரவாதம் வழங்கியுள்ளார்கள். எனவே, தோட்டத் தொழிலாளர்கள் வசதி மிக்க கிராமிய சூழ்நிலையில் வாழக் கூடிய காலம் நிச்சயம் உருவாகும்.

எனது நண்பர் திகாம்பரத்துக்கு கடந்த அரசாங்கத்தில் கொடுக்கப்பட்ட பிரதி அமைச்சர் பதவி போல் அல்லாது மலையக மக்களுக்கு உண்மையாக சேவை செய்யக் கூடிய பொருத்தமான அமைச்சை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

மலையக மக்களைப் பற்றி சிந்தித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் தோற்றுவித்த தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கு திகாம்பரம் நியமிக்கப்பட்டுள்ளதால், அந்த மக்களின் நிலையை நன்கு அறிந்து வைத்துள்ள அவர் திறமையான சேவையை வழங்குவார் என்று எதிர்பார்க்கிறேன்.

மலையகத்துக்கு நல்ல தலைமைத்துவத்தை வழங்கி திகாம்பரம் சிறப்பான முறையில் வழிநடத்துவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது. எனவே, அவருக்கும், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் தகுந்த ஒத்துழைப்பை வழங்கி மலையகம் மேலும் வளர்ச்சி காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

Related Post