முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு நாடாளுமன்றில் உரிய ஆசனமொன்று ஒதுக்கப்படாத காரணத்தினால் அமர்வுகளில் பங்கேற்காது நேற்று திரும்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற அமர்வுகள் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் ஆரம்பமான போது ஆளும், எதிர்க்கட்சியினருக்கான ஆசன ஒதுக்கீடு தொடர்பில் சிக்கல் நிலைமை காணப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு, ஆளும் கட்சிப் பகுதியில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை.
இதனால் திஸ்ஸ அத்தநாயக்க அமர்வுகளில் பங்கேற்காது அவையை விட்டு வெளியேறிச் சென்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
அவைத் தலைவரினால் வழங்கப்பட்ட ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பட்டியலில் திஸ்ஸவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியில் ஆசனமொன்றை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அத்தநாயக்க, எதிர்க்கட்சியில் சென்று அமர்ந்தால் தமது நாடாளுமன்ற உறுப்புரிமை பறிபோகக் கூடிய அபாயம் காணப்படுவதனால், அவையை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் இறுதி நேரத்தில் திஸ்ஸ அத்தநாயக்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,
தேர்தலில் மஹிந்த தோல்வியைத் தழுவியதனைத் தொடர்ந்து தற்போது செய்வதறியாது திஸ்ஸ அத்தநாயக்க திண்டாடி வருகின்றார்.