Breaking
Wed. Nov 27th, 2024

நமது வருங்காலத் தலைமுறைகளைப் பாதிக்கக் கூடிய விதத்தில் தற்போது உலகில் நிலவி வரும் அச்சுறுத்தல்களில் காலநிலை மாற்றத்தை விடப் பாரிய அச்சுறுத்தல் வேறு எதுவுமில்லை என அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை அதிபர் ஒபாமா நிகழ்த்திய ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையின் போது, நமது உலகைத் தற்போது மிகவும் அச்சுறுத்துவது, தீவிரவாதமோ, ISIS போராளிகளோ அல்லது அணுவாயுத உற்பத்தியோ அல்ல!.

‘எமது வருங்காலத் தலைமுறைகளுக்கு மிக அச்சுறுத்தலாக விளங்குவது காலநிலை மாற்றமே!’ என்றுள்ளார். ஒபாமாவின் இந்த அறிவிப்பை ஆமோதிப்பது போல் கூட்டத்தில் இருந்து பலத்த கரவொலி இடைவிடாது பல விநாடிகளுக்கு நீடித்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நாசா விஞ்ஞானிகளும் புவியியலாளர்களும் வெளியிட்ட அறிக்கையொன்றில் வரலாற்றுப் பதிவு மேற்கொள்ளப் பட்டதில் இருந்து 2014 ஆம் ஆண்டே மிக வெப்பாமான ஆண்டு என அறிவித்திருந்த நிலையில் ஒபாமாவும் அதற்கேற்ப இக்கூற்றினை மும்மொழிந்துள்ளார். மேலதிகமாக வெறுமனே 2014 மிக வெப்பமான ஆண்டு என்பதோடு மட்டுமல்லாது வரலாற்றுப் பதிவு தொடங்கியதில் இருந்து மிக வெப்பமான 15 ஆண்டுகளில் 14 மிக வெப்பமான ஆண்டுகள் இந்த 21 ஆம் நூற்றாண்டின் முதல் 14 ஆண்டுகளே என்ற அதிர்ச்சித் தகவலையும் ஒபாமா குறிப்பிட்டார்.

மேலும், புவி வெப்பமயமாதலைத் தவிர்ப்பதற்கும் அதற்கு வழிகோலும் பச்சை வீட்டு விளைவு வாயுக்களின் அளவைக் குறைப்பதிலும் அமெரிக்காவின் பங்களிப்பு கடந்த சில வருடங்களாக இடைவிட்டு விட்டே அளிக்கப் பட்டு வந்துள்ளது. பச்சை வீட்டு விளைவைக் குறைப்பதற்கு 1997 ஆம் ஆண்டு காலநிலை மாநாட்டில் அமுல் படுத்தப் பட்ட கியோட்டோ நெறிமுறைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளிக்கவில்லை என்பதுடன் 2007 ஆம் ஆண்டு காலநிலை மாற்ற மாநாடு அதிபர் புஷ் நிர்வாகத்தின் கீழ் உலக நாடுகளின் அமெரிக்கா மீதான கோபத்துடன் முடிவடைந்திருந்தது.

ஆயினும் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் பச்சை வீட்டு விளைவைத் தவிர்ப்பதற்கு சீனாவுடன் சமீபத்தில் ஒரு வித ஒப்பந்தம் எட்டப் பட்டிருந்ததையும் முக்கியமானதாக சுற்றுச் சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகில் பச்சை வீட்டு விளைவை ஏற்படுத்தும் மிக அதிகளவு கார்பன் வாயு வெளியேற்றம் செய்யும் நாடுகளில் சீனா முதலிடத்திலும் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post