Breaking
Sat. Nov 2nd, 2024

இர்ஷாத் றஹ்மத்துல்லா

கடந்த 9 ஆம்; திகதி நாம் இந்த பொதுத் தேர்தலில் தோல்வியுற்று இருப்போமெனில் எமது சமூகத்தின் தலைவிதி மாறியிருக்கும் நாம் எங்கே போயிருப்போம் என்று தெரியாது என்று தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும்,சமூர்த்தி,வீடமைப்பு பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எம்.அமீர் அலி எமது கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் சமூகத்தின் தேசிய சொத்து என்றும் கூறினார்.

முசலி சிலாவத்துறையில் தற்போது இடம் பெற்றுக் கொண்டிருக்கும் மாபெரும் வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிக்கொண்டிருக்கின்ற போது மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் தமது உரையில் குறிப்பிடுகையில் –
வடக்குக்கு மட்டுமல்ல கிழக்கில் வாழும் மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் இன்று அமைச்சர் றிசாத் பதியுதீன் கிழக்கின் மகனாக பிறந்திருக்க கூடாதா என்று கேட்கும் அளவுக்கு எமது தேசிய தலைவரின் ஆத்மா இன்று இரண்டரக் கலந்து கொண்டுள்ளதை எமது மண்ணில் காணமுடிகின்றது. இந்த நாட்டு முஸ்லிம்களின் ஒட்டு மொத்த தன்மானத்தையும் தன் தோல் மேல் சுமந்து துணிகரமான தீர்மானத்தை அல்லாஹ் உதவியால் அவரால் முன்னெடுக்க முடிந்தது.இது தான் தலைமைத்துவத்தின் துணிகரமான செயலாகும்.

இன்று இந்த தேசிய தலைமைத்துவத்தை அசிங்கப்படுத்தும் வகையில் சிலர் செயற்படுகின்றனர்.சில ஊடகவியலாளர்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஊடகங்கள் ஊடாக இந்த தேசிய தலை மகனை கொச்சைப்படுத்திவருகின்றனர்.இதற்கு துணை போய் நிற்பவர்கள் யார் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்.இவற்றுக்கு எதிராக எமது இளைஞர் சமூகம் கொதித்தெழுந்து போயுள்ளது.நாம் அதனை மட்டுப்படுத்தி வைத்திருக்கின்றோம்.இஸ்லாமியனாக நாம் இருக்கின்றோம்.பொறுமை மூலமும்,துஆ மூலமும் இந்த சதிகளை முறியடிக்க அல்லாஹ்வின் உதவியினை கோறுவோம்.

இன்று இந்த பிரதேச மக்களது தேவைகள் எத்தனையோ இருக்கின்றது.பல விட்டுக் கொடுப்புக்களுக்கு மத்தியில் வன்னி மாவட்ட மக்களின் அனைத்து தேவைகள் தொடர்பிலும் அதிகமான கவனத்தைச் செலுத்திவருகின்ற எமது தேசிய தலைவரின் பயணத்தை இந்த வன்னி வாழ் மக்கள் மறந்து விடுவார்கள் என்றால்,இந்த மக்கள் அந்த மகனுக்கு வேறு எந்தவொரு கைங்கரியத்தையும் செய்தாலும் அதற்கு ஈடாகாது.

இந்த பிரதேசத்தில் இருந்து பாராளுமன்றம் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்  எந்த தலைமைத்துவத்தின் ஊடாக சென்றார்கள் என்பதை மறந்து செயற்படுவது நாகரீகமான அரசியல் கலாசாரத்தை கொண்ட ஒருவரின் செயற்பாடாக இருக்காது.தான் ஏறிவந்த ஏணியினை உதைத்து விட்டு ஏறவும்,முடியாமலும்,இறங்கவும் முடியாமல் தவிக்கும் பரிதாபகரமான நிலையினை இன்று காணமுடிகின்றது என்று கூறிய பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வன்னி வாழ் மக்களின் தார்மீக பொறுப்பு எமது தேசிய தலைமைத்துவத்தை பாதுகாக்க ஒன்றுபட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

Related Post