அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் கொழும்பு புதுக்கடை இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஆற்றிய உரை
மேல்மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறுதித்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உங்கள் முன்னிலையில் உரையாற்றுதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட எமது கட்சி வடக்கு கிழக்கில் இதுவரை காலமும் அரசியல் செய்து பாராளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் உள்ளுராட்சி மன்றங்களிலும் பிரதிநிதிகளை பெற்றிருக்கின்றது. அந்த மக்களின் விடிவுக்காக உழைத்தும் வருகின்றது வடபுல முஸ்லிம்கள் சொந்த மண்ணிலிருந்து புலிகளால் விரட்டப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன.
இடப்பெயர்வால் இவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டங்கள் பல மில்லியன் ரூபா பெறுமதிமிக்கவை. எதிர்கொண்ட கஷ்டங்கள் ஏட்டிலடங்காதவை. பொன்கொழிக்கும் வயல் நிலங்கள், தோட்டங்களை இழந்தனர். அகதி முகாம்களிலே வாழ்ந்து வரும் இந்த மக்கள் யுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்டபோது படிப்படியாக அங்கு மீள்குடியேற தலைப்பட்டுள்ளனர்.
எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையிலே வடக்கு கிழக்கில் மட்டும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நாம் கொழும்பிலும் காலூன்றவேண்டிய தேவை – நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வடக்கு கிழக்கிற்கு வெளியே எத்தனையோ மாகாண சபைகளின் தேர்தல்களும் உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல்களும் இடம்பெற்றபோதும் நாம் அதில் பங்கேற்கவில்லை.
எனினும் கொழும்பிலே அண்மையில் இனவாதிகளால் எமது சமூகத்தின் மீது திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல்கள், அடாவடித்தனங்கள் கண்டு நாம் மனம் வெதும்பினோம். கிராண்ட்பாஸிலும் தெஹிவலையிலும் நாம் உயிரினும் மேலாக மதிக்கும் இறையில்லங்கள் தாக்கப்பட்டபோது அந்த இடத்திற்கு இரவோடிரவாக உயிரையும் துச்சமென மதித்து ஓடினோம். காட்டுமிராண்டித்தனத்தையும் அட்டூழியங்களையும் அடக்குமுறைகளையும் எதிர்த்து நின்றோம் இதற்கு இங்குள்ளவர்கள் சாட்சி.
பொலிசாரின் முன்னிலையில் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டபோதும் கண்ணாடிகள் கல்லெறிந்து நொறுக்கப்பட்டபோதும் நாம் அதனை எதிர்த்து குரல்கொடுத்தோம் பொலிசாரின் பாரபட்சத்தை எதிர்த்தோம்.
கொழும்பு மக்கள் துன்பப்பட்போது ஐக்கிய தேசியக் கட்சிகாரர்களோ, முஸ்லிம் காங்கிரஸ்காரர்களோ அந்த இடத்திற்கு வரவில்லை. மர்ஹூம் அஷ்ரப் தேசிய அரசியலில் பிரவேசித்து பொதுவாக நாட்டுக்கும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கும் தமது பணியை மேற்கொள்ள விரும்பினார்.
அவரது அரசியல் பிரவேசம் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விழிப்புணர்வுக்கு பெரிதும் உதவியது. அஷ்ரபின் இலட்சிய செயற்பாடாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் முஸ்லிம் அரசியல் கட்சி உதயமானது. அஷ்ரபின் தனிப்பட்ட ஆளுமையும் சாதூரியமான பேச்சும், செயற்பாடுகளும் முஸ்லிம் புத்திஜீவிகளையும் அரசியல்வாதிகளையும் கட்சியில் இணையச் செய்தன.
தேர்தலில் அபார வெற்றிபெற்றதன் காரணமாக ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவும் முஸ்லிம் காங்கிரஸ் விளங்கியது. அஷ்ரபின் மறைவையடுத்து மு.கா தலைமைத்துவம் மாறியபின்னர் கட்சியின் வளர்ச்சிக்காக தமது உடல், பொருள், நேரம், ஆற்றலை அர்ப்பணித்த அரசியல் முக்கியஸ்தர்கள் கட்சியைவிட்டு படிப்படியாக வெளியேறினர். இதற்கு தற்போதைய தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளே காரணம். மு.கா இன்று வீழ்ச்சிப்பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது. முஸ்லிம்களை ஆபத்தானநிலையில் அகலபாதாளத்துக்கு தள்ளியள்ளது.
சமூகத்தை பாதுகாக்க புறப்பட்ட கட்சி எம்மை அடிமைச் சமூகம்போல் ஆகியியுள்ளது. தேர்தலுக்கு தேர்தல் மக்களிடம் வந்து வீரவசனங்களை பேசி வாக்குகளை கொள்ளையடித்துச் செல்லும் கட்சியாக இன்று மாறியுள்ளது. இந்த நிலையில்தான் மு.காவை விட்டு வெளியேறிய நாம் எமக்கென தனிக்கட்சியமைத்தோம். இந்தக் கட்சி தோற்றம்பெற்று குறுகிய காலத்தில் பாரிய வளர்ச்சி கண்டுள்ளது. நாம் அரசில் இருந்தபோதும் பலமான சக்தியாக இருந்து வருகின்றோம் தனித்துவம் தனித்துவம் எனக்கூறி சமூகத்தை முட்டாள்களாக்க நாம் முயலவில்லை. அரசில் இருந்தபோதும் நாம் தனித்துவத்தை பேணுகின்றோம். முஸ்லிம் சமூகத்தின் நலன்களுக்காக துடிப்புடன் செயலாற்றுகின்றோம்.
சமூகத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டு நாம் தட்டிக்கேட்கின்றோம். பேசவேண்டிய இடத்தில் பேசி முஸ்லிம் சமூகத்தின் நலவுரிமை காக்கின்றோம். சமூகப்பணி மூலம் வளர்ச்சிபெற்ற எமது கட்சியின் எழுச்சியை பொறுக்கமாட்டாத சிலர் எம்மைப்பற்றி காரசாரமாக தேர்தல் மேடைகளில் பேசி வருகின்றார்கள் எம்மைக்கண்டு அஞ்சுகின்றார்கள். அவர்களின் அரசியல் இருப்பு பாழாகிவிடுமென பதைபதைக்கின்றனர்.
கொழும்பு வாழ் முஸ்லிம்கள் பார்ப்பாரும் கேட்பாரும் அற்ற ஒரு பரதேசி சமூகமாக வாழ்வதை நான் இன்று கண்ணாரக் காண்கின்றேன். கண்ணீர் வடிக்கின்றேன்.
காலாகாலமாக உங்கள் வாக்குகளை கொள்ளையடிக்கும் இந்த கூட்டம் தாம் வசதியாக வாழ்வதற்காக உங்களை இன்னும் சேரிப்புறங்களிலும் மூலை முடுக்குகளிலும் வாழவைத்து வேடிக்கை பார்க்கின்றது. நீங்கள் அவர்களுக்கு ஜயவேவா போடவேண்டும் என்று எதிர்பார்க்கின்றது. நாங்கள் இன்ஷா அல்லாஹ் இந்த நிலையை மாற்றியமைப்போம். உங்கள் தோட்டத்து வாழ்க்கையை சீரமைப்போம். கொழும்பு வாழ் மக்களாகிய நீங்கள் இன்னும் கல்வியிலே பின்னடைந்து இருக்கின்றீர்கள். வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கி வாழும் உங்களுக்கு முறையான கல்வி கற்பதற்கு வழியில்லாத நிலை காணப்படுகின்றது.
படிப்பதற்கு ஒழுங்கான பாடசாலையில்லை. இருக்கும் பாடசாலைகளில் கட்டிட வசதியில்லை. ஆய்வுகூட வசதிகள் இல்லை. மலசலகூட வசதிகள் இல்லை. பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப உங்களிடம் வசதிகள் இல்லை. இந்த நிலையில் நீங்கள் படும் அவதிகளை தீர்த்து வைக்க எந்த அரசியல்வாதியேனும் முன்வந்தார்களா? முரத்திற்கும் யானைக்கும் வாக்களித்து நீங்கள் கண்டபலன்தான் என்ன. அவர்கள் அப்பாவிகளான உங்களை தொடர்ந்தும் ஏமாற்றிக்கொண்டே இருக்கின்றனர்.
நீங்களும் ஏமாளிகளாகவே இருக்கின்றீர்கள். இறைவன் நாடினால் இந்தகொழும்பில் எமது கட்சி இந்த நிலையை மாற்றும். தலைநகரிலே சமூகப்புரட்சியை நாம் ஏற்படுத்துவோம். பொருளாதார மறுமலர்ச்சியை கொண்டு வருவோம் இவைகள் வெறும் வார்த்தைகள் அல்ல. உண்மையின் வெளிப்பாடுகள். போரினால் பாதிக்கப்பட்ட வடக்கை குறுகிய காலத்தில் கட்டியெழுப்பிய நாம் கொழும்பு மக்களின் வாழ்விலும் வசந்தத்தை ஏற்படுத்துவோம். நாம் சொன்னதை செய்வோம். மனச்சாற்சிக்கு விரோதமாக நடக்கமாட்டோம்.
நாம் சமூக விடுதலைப் போராட்டத்தில் குதித்துள்ளோம். நாம் அடிமைச் சமூகமல்ல இந்த சமூகத்தை பாதுகாக்க, அது தலைநிமிர்ந்து வாழ அத்தனையையும் செய்வோம். முஸ்லிம்கள் அனைத்து துறைகளிலும் சமத்துவமாக வாழும் உரிமையுடையவர்கள். 45 நாட்களுக்கு முன்னர் கொழும்பிலோ, புதுக்கடையிலோ, வாழைத்தோட்டத்திலோ, கொம்பனிவீதியிலோ எமக்கென ஓர் உறுப்பினரேனும் இருக்கவில்லை.
ஆனால் இந்த ஜனசமுத்திரத்தை காண்கின்றபோது வெற்றிலைக்கும் யானைக்கும் அடுத்து நாமே மூன்றாவது இடத்திற்கு வருவோம் என்பதை அறுதியாக கூறுகின்றேன் சமகால பிரச்சினைகளை தீர்க்கவும் சமூகத்தை பாதுகாக்கவும் கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவும் உங்கள் முன் வந்திருக்கின்றோம்.
நீங்கள் படும் வேதனைகளை போக்குவதற்கு முன்வந்திருக்கின்றோம். வடமாகாண முஸ்லிம்கள்மீது இழைக்கப்பட்ட சில கொடுமைகளை வைத்து குரல்கொடுத்தமைக்காக என்னை திட்டமிட்டு நீதிமன்றத்தில் நிறுத்தினர். சிறை சென்றாலும் எமது சமூகத்திற்காக குரல் கொடுப்பதை எவரும் தடுக்க முடியாது. அமைச்சராக இருக்கின்றேன் என்பதற்காக சமூகத்தை காட்டிக்கொடுக்க முடியாது.
அமைச்சரா? சமூகமா? என்ற நிலை வரும்போது சமூகம்தான் எனக்கு முக்கியம். இன்று இந்நாட்டு முஸ்லிம்கள்மீது இனவாத சக்திகள் திட்டமிட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். முஸ்லிம்கள்மீது அபாண்டமான பழிகளை சுமத்துவதும் எமது பெண்களின் ஆடைகள் விடயத்தில் அனாவசியமாக தலையிடுவதும் எமது உணவுகள் தொடர்பாக விமர்சிப்பதும் அவர்களது நாளாந்த நடவடிக்கைகளாக மாறியுள்ளன. இனவாதிகளின் இந்த கொட்டங்களை இன்னும் நாம் பார்;த்துக்கொண்டிருக்க முடியாது.
இந்த சக்திகளின் வாய்க்கு பூட்டுப்போடுவோம் பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் என்னையும் எனது வடபுல சமூகத்தையும் கேவளப்படுத்தி அபாண்டமாக பழிசுமத்தியமைக்காக அவரிடம் 500 மில்லியன் நஷ்ட ஈடுகோரி கடிதம் அனுப்பியுள்ளேன். இருவார காலத்திற்குள் அவர்கூறிய விடயங்கள் தவறென மன்னிப்புக் கோராவிட்டால் நான் சட்ட நடவடிக்கை எடுப்பேன். எமது கட்சியிலே சமூக உணர்வாளர்கள், சமூகத்தைப்பற்றி கவலை கொண்டவர்கள் இருக்கின்றார்கள்.
எனவே இவர்களையும் இணைத்துக்கொண்டு தலைநிமிர்ந்து வாழும் சமூகமாக உங்களை மாற்ற நான் என்னை அர்ப்பணித்துள்ளேன். நாம் கோழைச் சமூகமல்ல. வீரச்;சிங்கம் அலியின் வழிவந்தவர்கள். எம்மைச் சீண்டிப்பார்க்கின்றார்கள் நாடு பிளவுபடக்கூடாது என்பதற்காக தாய்நாட்டுக்கு விசுவாசமாக உழைத்த காரணத்தினால் புலிகள் எம்மை விரட்டியடித்தனர். அகதி வாழ்வின் கொடுமையை அனுபவித்தவர்கள்.
தற்போது ஏற்பட்டுள்ள சமாதான காற்றை சுவாசிப்பதற்கும் நிம்மதியாக தொழில் புரிவதற்கும் முறையாக கல்வி கற்பதற்கும் எமது கலாச்சாரத்தை பின்பற்றுவதற்கும் எமக்கு வழிவிடுங்கள்.
இந்த தேர்தலில் மயில் சின்னத்தில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு வாக்களிப்பதன் மூலம் உங்களுக்கு விமோசனம் கிடைக்கும். கடந்த காலங்களில் நீங்கள் பட்ட அவஸ்த்தைகளை தீர்ப்பதற்கு உங்கள் பிரதேசத்திலுள்ளவர்களை வெற்றிபெற செய்யுங்கள் நாம் அவர்களுக்கு பின்புலமாக நின்று உங்கள் வாழ்க்கையை சிறப்பாக்குவோம். உங்கள் கௌரவத்தை பாதுகாப்போம்.
எமது இந்த போராட்டத்திலே ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது இலங்கையின் அரசியல் வரலாற்றிலே உலமாக்கள் அரசியலில் நேரடியாக ஈடுபட்டு பிரச்சாரம் செய்த சரித்திரம் கிடையவே கிடையாது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாளிகாவத்தையில் பெருந்திரளான உலமாக்கள் ஒன்றுபட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்காக பிரச்சாரம் மேற்கொண்டமை எனது மனதை நெகுழச்செய்துள்ளது. அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாட்டை என்னால் நினைத்து பார்க்கக்கூட முடியாதுள்ளது.
அன்புக்குரிய தாய்மார்களே, இளைஞர்களே, யுவதிகளே, பெரியோர்களே நாங்கள் உங்கள் வாழ்விலே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவே வந்திருக்கின்றோம் இதை நீங்கள் நம்புங்கள். உங்கள் ஆணையை தாருங்கள். எங்கள் வெற்றிக்காக நீங்கள் பிரார்த்தியுங்கள். தஹஜ்ஜத் தொழுகையிலும், சுன்னத்தான தொழுகையிலும் எங்களுக்காக இறைஞ்சுங்கள். முடிந்தால் நோன்பு நோற்று பிரார்த்தியுங்கள் என மிகவும் உருக்கமாகவும் அன்பாகவும், ஆதரவாகவும் கேட்கின்றோம். மயிலை வெற்றிபெறச் செய்தால் உங்கள் எதிர்கால சந்ததி நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழும் என்பதை நான் ஆணித்தரமாக கூறிவைக்கின்றேன்.