குரோதம் வன்முறைகளில்லாத புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவதே எமது பிரதான நோக்கம். அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் கலாசாரமொன்றை நாட்டில் ஏற்படுத்த நானும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரத்துங்கவும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். அனைத்துக்கட்சிகளினதும் ஒத்துழைப்பு இதில் மிக முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலனறுவை மக்களால் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வு பொலனறுவை நகரில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் விசேட அதிதியாகக் கலந்துகொண்ட பேசிய போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ராஜபக்ஷ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக நாம் ஆரம்பித்த போராட்டம் ஜனவரி 9ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானவுடன் நிறைவுக்கு வந்தது.
வெவ்வேறு குழுக்களை நியமித்து பொலனறுவையை அழிக்கும் பல்வேறு பிரயத்தனங்கள் கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட போதும் ரஜரட்ட பிரதேச மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்தனர். முல்கிரிகல வரலாற்றுக் காலத்தின் பின் ரஜரட்டயிலிருந்து அரச தலைவர் ஒருவர் உருவாகியுள்ளமை நாம் பெருமைப்படக் கூடியது. பொலனறுவை முன்னேற்றமடையாத ஒரு பிரதேசம் இதை விட முன்னேற்றமடைந்துள்ள பிரதேசங்கள் நாட்டில் உள்ளன, புதிய ஜனாதிபதியின் நிர்வாகத்தின் கீழ் பொலனறுவை முன்னேற்றம் அடைவது உறுதி.
எமது போராட்டத்தில் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஒன்று அரச மாளிகை, மற்றது சிறைவீடு. நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட சோபித்த தேரருடன் ஒன்றிணைந்தோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நல் மனம் கொண்டவர்களும் எம்மோடு இணைந்தனர். ஜனாதிபதித் தேர்தலுக்கான சந்தர்ப்பத்தை மஹிந்த ராஜபக்ஷவே எமக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். டி. எஸ். சேனநாயக்க. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க , சி. பி. டி. சில்வா, டட்லி சேனநாயக்க என பலவரும் பொலனறுவையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
நாட்டில் ராஜபக்ஷ ஆட்சிக்கு முடிவுகட்டி சுதந்திரத்தை ஏற்படுத்த நாம் ஒன்றிணைந்தோம். அதற்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரையே தேர்ந்தெடுத்தோம். இதற்காக ஐ. தே. க. வும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்தன. ஜே. வி. பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என பல கட்சிகளிள் எம்மோடு இணைந்தன. பாராளுமன்றத்துக்கு வெளியே இருந்தும் ஆதரவு கிடைத்தது.
வெளியில் வராமலே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளிருந்து கொண்டு பலர் எமக்கு ஒத்துழைப்பு வழங்கினர். இதுபோன்ற பாரிய கூட்டு இலங்கையில் இதுவரை ஒன்றிணைந்து செயற்பட்டதில்லை. நானும் மைத்திரிபாலவும் இரு வேறு பக்கங்களிலிருந்து அரசியல் செய்தாலும் நாட்டிற்காக இச்சந்தர்ப்பத்தில் நாம் ஒன்றிணைந்தோம். அரசாங்கம் அமைத்து ஒரு மாதம் கூட முடிவுறாத நிலையில் நாம் மக்களுக்கு நிவாரணம் வழங்க ஆரம்பித்து விட்டோம். எந்த அரசாங்கமும் இதுவரை இவ்வாறு செயற்பட்டதில்லை.
மக்களுக்கு வழங்கிய வாக்கு எதிர்வரும் 29ஆம் திகதி நிறைவேறும். நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் அதனை வெளிப்படுத்துவார். இங்கிலாந்தில் கூட எத்தனையோ கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. அவர்கள் மோதிக்கொள்வதில்லை. பழிவாங்குவதுமில்லை. புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தி நாம் அனைவரும் ஒன்றாக செயற்பட வேண்டிய தருணம் இது.” என்றுள்ளார்.