Breaking
Sat. Nov 23rd, 2024

மவ்லவி யூனுஸ் தப்ரீஸ்

Aluthgama Beruwala Darganaharஅல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கிறான். தான் நாடியவர்களிடமிருந்து ஆட்சியை எடுக்கிறான். ஆட்சியை பெற்றவர்கள் அதை சரியாக பயன்படுத்தினால் அவர்களை அல்லாஹ் கண்ணியப் படுத்துகிறான்.

அதே நேரம் ஆட்சியை பெற்றவர்கள் அனைத்து அதிகாரங்களையும் தமது கையில் எடுத்துக் கொண்டு, மக்களை அடக்கியாண்டால் அவர்களின் அக்கிரமங்கள் தலைவிரித்து ஆடும் போது மரத்தை வேரோடு பிடுங்குவதுப் போல அவ்ஆட்சியாளர்களின் அதிகாரங்களை அல்லாஹ் பிடுங்கி, அதே மக்களுக்கு மத்தியில் அநியாயக் காரர்களை அல்லாஹ் இழிவுப் படுத்துகிறான். இதை நூஹ் நபியுடைய காலத்திலிருந்து நபி (ஸல்) அவர்களின் காலம் வரை இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் நாம் காணலாம்.

இலங்கையின் கடந்த கால ஆட்சியாளர்களுக்கும் அதே நிலை தான் ஏற்ப்பட்டது. அவர்கள் ஒரு பக்கம் மக்களுக்கு அநியாயம் செய்து கொண்டும், மறு பக்கம் அநியாயம் செய்து குழப்பம் செய்தவர்களை தண்டிக்காமல் தம்மோடு அணைத்துக் கொண்டுமிருந்தார்கள். இந்த அநியாயங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இறைவனால் அவர்களுக்கு கொடுக்கப் பட்ட தண்டனை என்றே சொல்ல வேண்டும்.

ஒரு தனி மனிதனாக இருக்கலாம், ஒரு ஜமாத்தாக இருக்கலாம், அதிகாரம் பெற்றவர்களாக இருக்கலாம், யாராக இருந்தாலும் பிறருக்கு அநியாயம் செய்தால், உலகத்திலுள்ள நீதிமன்றங்களில் சரியான தீர்ப்பு கிடைக்காவிட்டாலும், சந்தர்ப்பம் பார்த்து படைத்தவன் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்கிவிடுகிறான்.

கடந்த ஆட்சியின் போது சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் குறி வைத்து தாக்கப்பட்டனர். இருபதுக்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் அநியாயக் காரர்களால் சேதங்களுக்கு உள்ளாக்கப் பட்ட சந்தர்பத்தில், ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் சம்பந்தப் பட்டவர்களின் மீது எந்த வித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல்,மேலும், மேலும் அவ்வாறான செயல் பாடுகளுக்கு வழி செய்து கொடுத்தனர். அதற்கு இறைவனால் கொடுக்கப் பட்ட தண்டனையாக இது இருக்கலாம்?

அல்லது ரமலான் காலத்தில் கிறீஸ் மேன் என்ற பெயரில் முஸ்லிம்கள் செரிந்து வாழும் பகுதிக்குள் அச்ச நிலையை ஏற்படுத்தி முஸ்லிம்களை நிம்மதியாக வணக்கம் செய்ய விடாமல் சூழ்ச்சி செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தாததினால் இறைவன் கொடுத்த தண்டனையாக இருக்கலாம்?

அல்லது முஸ்லிம்களுடைய சொத்துக்களை கொள்ளை அடித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமைக்காக இறைவனால் கொடுக்கப்பட்ட ,தண்டனையாக இது இருக்கலாம்?

அல்லது முஸ்லிம்களுடைய கடைகளுக்கு கோடிக்கணக்கான சொத்துக்களுடன் நெருப்பு வைத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காததிற்கு இறைவனால் கொடுக்கப் பட்ட,தண்டனையாக இருக்கலாம்?

அல்லது பள்ளிவாசல்களுக்குள் பன்றியின் மாமிசத்தையும், இரத்தத்தையும், மலத்தையும் வீசி விட்டு சென்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காததிற்கு இறைவனால் கொடுக்கப் பட்ட,தண்டனையாக இருக்கலாம்?

அல்லது குர்ஆனின் முஸ்லிம் அல்லாதவர்களை கொலைசெய்ய தூண்டுகிறது, சாப்பாட்டில் எச்சி உமிழ்ந்து கொடுக்கும்படி குர்ஆன் சொல்கிறது, என்று குர்ஆனின் மீது அவதூறுகளை இட்டுக்கட்டியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமைக்காக இறைவனால் கொடுக்கப் பட்ட,தண்டனையாக இருக்கலாம்?

அல்லது அளுத்கம கலவரத்தை ஏற்ப்படுத்தி முஸ்லிம்களின் பல வீடுகளையும், கடைகளையும், உடைத்தும், நெருப்பு வைத்தும் கொள்ளையடித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காததிற்கு இறைவனால் கொடுக்கப் பட்ட, தண்டனையாக இருக்கலாம்?

அல்லது அளுத்கம பிரதேசத்தில் கலவரத்தில் அநியாயமாக கொள்ளப் பட்டவர்களின் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள், கேட்ட பிராத்தனைகளுக்கு குறிப்பாக தந்தையை இழந்த அந்த சிறுமி அழுது கொண்டு சொன்ன வார்த்தையான நீங்க மண்ணா போகனும் என்ற சாபத்திற்கு இறைவனால் கொடுக்கப் பட்ட,தண்டனையாக இது இருக்கலாம்?

அல்லது ஊடகவியலாளர்கள், முக்கியஸ்தர்கள், செல்வந்தர்கள் என அநியாயமான முறையில் பலர் கொலை செய்யப்பட்டதற்கு இறைவனால் கொடுக்கப் பட்ட, தண்டனையாக இது இருக்கலாம்?

அல்லது நான், நான் என்று பல மேடைகளில் பேசிய ஆணவ பேச்சுக்கு இறைவனால் கொடுக்கப் பட்ட,தண்டனையாக இருக்கலாம்?

அல்லது பொதுமக்களின் கோடிக்கணக்கான சொத்துகளை கொள்ளையடித்திற்காக இறைவனால் கொடுக்கப் பட்ட , தண்டனையாக இது இருக்கலாம்?

-islamkalvi-

அல்லது மேற் சொல்லப் பட்ட அல்லது சொல்லப் படாத ஒட்டு மொத்த காரணங்களுக்காக இறைவனால் கொடுக்கப் பட்ட, தண்டனையாக இது இருக்கலாம்?

இன்னும் இரண்டு வருட ஆட்சிக் காலம் இருக்கும் நிலையில் அதை அனுபவிக்க விடாமல் தடுக்கும் வகையில் இறைவனால் கொடுக்கப் பட்ட பெரிய தண்டனை இதுவாக இருக்கலாம்.

எது எப்படியோ அநியாயக்காரர்களுக்கு பாதிக்கப் பட்ட மக்கள் மூலமே இறைவன் சரியான தண்டனையைக் கொடுத்து விட்டான். அல்ஹம்து லில்லாஹ்! இது தற்போதய ஆட்சிக்காரர்களுக்கும் ஒரு படிப்பினையாகும்.

புயலுக்குப் பின் ஒரு தென்றல் வரும் என்று சொல்வதற்கு இணங்க பல அநியாயத்திற்குப் பின் அல்லாஹ் நமக்கு நிம்மதியை தந்துள்ளான். வெற்றியைப் பெற்ற நாம் இறைவனுக்கு நன்றி கெட்டவர்களாக மாறிவிடாமல் அந்த வெற்றியை தந்த இறைவனுக்கு அதிகமாக அமல்கள் மூலம் நன்றி உணர்வோடு நடந்து கொள்வோமாக!

Related Post