Shameela Yoosuf Ali
வெள்ளவத்தை தொடர்மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சப்னாவின் நினைவில்…!
கனவுகளுக்குக் கால் முளைக்கும் வயது உனது
நடந்ததெல்லாம் கூட கனவாக இருந்து விடக் கூடாதா..?
விழுந்து சிதறியது நீயல்ல; எல்லோருடைய உள்ளங்களும் தான்.
இருபத்திரண்டாவது மாடியிலிருந்து நீயாகத் தான் விழுந்தாயா அல்லது யாராவது தள்ளி விட்டார்களாவென எல்லோரும் தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள். உன்னைத் தள்ளி விடும் கொடுமனது எவருக்கும் வாய்த்திருக்கக் கூடாது என்று உள்ளம் உள்ளுக்குள் பிரார்த்திக்கின்றது.
காற்று வெளியில் உன் சிணுங்கல்கள், சிரிப்புக்கள், செல்லக் கோபம் எல்லாமே சிந்தியிருக்கின்றன. நிரப்ப முடியாத உன் இடைவெளியை உன்னோடு வாழ்ந்திருந்த ஞாபகங்கள் தான் இனி நிரப்ப வேண்டும்.
சிட்டுக் குருவிச் சிறகு போல உன்னைத் தூக்கிச் செல்கிறார்கள்.
வலிகளற்ற அந்தமொன்றிட்கு உன் உயிர் பெயர்ந்து விட்டது.
உனக்கும் கனவுகள் இருந்திருக்கும்.
பட்டாம் பூச்சிக் கனவுகள்.
சங்கீதக் கதிரை, சைக்கிள் சவாரி, கார்ட்டூன்கள், சாக்ளேட், உடைந்த கிரையோன்கள்….
எப்போதேனும் நீ மணமான அழிரப்பரைக் கடித்துப் பார்த்திருக்கலாம்.
மண்ணுக்குள் கால் கிளர்த்தி நெகிழும் துகள் கண்டிருக்கலாம்.
வரைந்த எலிக்கு சிவப்பு வர்ணம் பூசிச் சிரித்திருக்கலாம்.
லெமன் பப் பிஸ்கட்டில் உள்ள கிரீமை தனியாக நக்கிச் சாப்பிட்டிருக்கலாம்.
பொம்மைகளோடு குடும்பம் நடத்தியிருக்கலாம்.
‘மூன்று கரடிகளும் சிறுமியும்’ கதையை நூறாவது முறையும் சொல்லச் சொல்லி அடம் பிடித்திருக்கலாம்.
நான்கு வயதுக்குள் நாலாயிரம் நினைவுகளை உன்னைச் சார்ந்தவர்களுக்குள்
உலர விட்டு விட்டு நீ ஈரமாகவே சென்று விட்டாய்.
மரணம் உன் உடலை மட்டுமல்ல சுற்றியிருந்த சந்தோஷங்களையும் தனக்குச் சொந்தமாக்கிச் சென்று விட்டது.
சுவனத்தில் சிட்டுக் குருவிக் கூடொன்று கட்டுங்கள்.
உன் இறக்கை விரிக்க முடியாது போன பூமிக்கு மேலே சுவனத்தின் முடிவிலா வானப்பரப்பெங்கும் இறக்கை கொண்டு நீ பறந்து செல்.