சமீபத்தில் புதுப்பிக்கப் பட்ட அமெரிக்க கியூப உறவுக்கு ஓய்வு பெற்ற முன்னால் கியூப அதிபரும் மக்களின் அபிலாஷைக்குரிய முக்கிய தலைவருமான ஃபிடெல் காஸ்ட்ரோ தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் காஸ்ட்ரோ இன்னமும் அமெரிக்க அதிகாரிகளைப் பூரணமாக நம்பவில்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றது.
இவ்விடயம் தொடர்பாக கியூபாவின் கம்யூனிசக் கட்சி பத்திரிகையான ‘கிரன்மா’ இனது இணையத் தளத்தில் வெளியிடப் பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, ‘அமெரிக்காவின் கொள்கைகளை காஸ்ட்ரோ இன்னமும் நம்பவில்லை என்பதுடன் அமெரிக்க அதிகாரிகளுடன் இன்னமும் ஒரு வார்த்தையைக் கூட பகிர்ந்து கொள்ளாத போதும் இவை நீண்ட காலமாக இரு தேசங்களுக்கும் இடையே மூண்டிருக்கும் குழப்பம் மற்றும் யுத்த அச்சுறுத்தலைப் போக்கக் கூடிய சமாதான ரீதியிலான தீர்வினை எதிர்ப்பது என்பது அர்த்தமாகாது!’ எனப் பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே கடந்த 5 தசாப்தங்களுக்கும் மேலாக மூண்டிருந்த பனி யுத்தத்துக்கு ஒப்பான விரோதமான போக்கு, கடந்த மாதம் இவ்விரு நாடுகளும் தமது உறவைப் புதுப்பிக்க முன் வந்ததில் இருந்து ஓரளவு அகன்று விட்டது என்றே கூற வேண்டும். மேலும் தமது உறவு பலப் படுவதற்கு முதற்படியாக இரு நாடுகளும் கைதிகள் பரிமாற்றம் மற்றும் பேச்சுவார்த்தை ஆகியவற்றையும் நிகழ்த்தியிருந்தன. கியூபாவுடனான அமெரிக்காவின் பொருளாதார வர்த்தகத் தடைகள் இன்னமும் அமுலில் உள்ளன என்ற போதும் அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் கியூபா மீதான சில தடைகளை நீக்குவதாகவும் அங்கு பயணம் மேற்கொள்ள விரும்பும் அமெரிக்கக் குடிமக்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாகவும் உறுதியளித்து இருந்தார்.
காஸ்ட்ரோ மற்றும் அவரது நட்புப் புரட்சியாளர்கள் மூலம் கியூபாவில் கம்யூனிசம் வேரூன்றக் கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்ததால் ஏற்பட்ட அச்சத்தால் 1961 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா தனது தூதரக உறவை முறித்துக் கொண்டதுடன் பொருளாதாரத் தடைகளையும் விதித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 88 வயதாகும் கியூபாவின் புரட்சித் தலைவர் காஸ்ட்ரோ உடல் நலக் குறைவு காரணமாக 2006 இல் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.