Breaking
Fri. Nov 1st, 2024

கடந்த வருடம் மார்ச் 8 ஆம் திகதி மலேசியன் ஏர்லைன்ஸின் MH370 விமானம் 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது நடுவானில் மாயமாகி இருந்தது.

காணாமற் போன இவ்விமானத்தின் மர்மம் ஏவியேஷன் வரலாற்றிலேயே மிகவும் புதிர் மிக்கதாகவும் இன்று வரை சிறிய ஒரு தடயமும் கிடைக்காத ஒன்றாகவும் பதியப் பட்டுள்ளது.

மேலும் இதைத் தேடும் பணியும் விமானவியல் வரலாற்றில் அதிகளவு பணம் செலவழித்துத் தேடப் பட்ட ஒன்றாக மாறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எதிரவரும் மார்ச் 7 ஆம் திகதி அதாவது இவ்விமானம் காணாமற் போனதன் ஒரு வருட நினைவு தினத்துக்கு முந்தைய நாள் இவ்விமான விபத்து குறித்த விசாரணைகளின் அடிப்படையிலான பூரண இடைக்கால அறிக்கையை வெளியிடுவது என மலேசிய அரசு முடிவெடுத்துள்ளது. எனினும் இந்த அறிக்கையில் குறித்த MH370 விமானத்தின் கதி என்ன என்பது தெரியப் படுத்தப் பட்டுள்ளதா என்பது குறித்து மலேசியப் பிரதி போக்குவரத்து அமைச்சர் அப்துல் அஷிஸ் கருத்துக் கூற மறுத்து விட்டார். ஆயினும் இது விசாரணைக் குழுவின் அறிக்கை எனவும் சில நூற்றுக் கணக்கான பக்கங்களைக் கொண்ட பாரிய அறிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுமக்கள் விமானப் பயணப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் தயாரிக்கப் பட்டு வெளியிடப் படவுள்ள இவ்வறிக்கை ICAO எனப்படும் சர்வதேச சிவில் ஏவியேஷன் நிறுவனத்தினால் எந்த ஒரு பயணிகள் விமானத்தின் விபத்துக்கும் 1 வருடத்துக்குப் பின்னர் வேண்டப் படும் அறிக்கை எனவும் அஷிஸ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மலேசிய அதிகாரிகளது கூற்றுப் படி செய்மதித் தகவல் அடிப்படையில் MH370 விமானமானது தெற்கு இந்து சமுத்திரத்தில் எங்காவது வீழ்ந்து விபத்தில் சிக்கியிருக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த MH370 விமானமானது கடத்தப் பட்டிருக்கலாம், பைலட் பிழை விட்டிருக்கலாம், எந்திரக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் அல்லது விமானத்துக்குள் ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டு பைலட் மற்றும் விமானப் பணியாளர்கள் முடக்கப் பட்டிருக்கலாம் எனப் பல ஊகங்கள் இன்று வரை பதில் தெரியாமல் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post