வட அமெரிக்க மாநிலமான அலாஸ்காவில் நேற்று சனிக்கிழமை இரு சிறிய ரக விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்டுள்ளன. அலாஸ்காவின் மிக அதிக சனத்தொகையைக் கொண்ட அங்கோராகே (Anchorage) என்ற நகருக்கு வடக்கே இவ்விபத்து நடைபெற்றுள்ளது.
விபத்தின் போது பாரஷூட் மூலம் விமானத்தில் இருந்து வெளியேறிய இரு பைலட்டுக்களில் ஒருவருக்கு மோசமான காயங்களும் மற்றையவருக்கு சாதாரண காயங்களும் ஏற்பட்டுள்ளன.
இத்தகவல் அலாஸ்காவின் பொதுமக்கள் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் காயமடைந்த இரு பைலட்டுக்களும் பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய இரு சிறிய விமானங்களிலும் வேறு பயணிகள் எவரும் பயணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விமானங்கள் மோதிக் கொண்ட பகுதி மட்-சூ பள்ளத்தாக்கிற்கு மேலே என அடையாளம் காணப்பட்டுள்ளது.
தற்போது இவ்விபத்து குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்புப் பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ள போதும் குறித்த பைலட்டுக்கள் குறித்த விவரம் இன்னமும் வெளியிடப் படவில்லை. அலாஸ்காவில் இது போன்ற நடுவானில் இரு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் 2011 செப்டம்பரிலும் நடந்திருந்தது. இதில் ஓர் பைலட் பலியாகி இருந்தார். உலகில் நடுவானில் இரு விமானங்கள் மோதிக் கொள்வது போன்ற சம்பவங்கள் மிக அரிதாகவே இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.