தம்மை உடனடியாக சந்திக்குமாறு சிவில் விமான சேவைகள் அமைச்சர் பைசர் முஸ்தாபாவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.
சிவில் விமான சேவை அமைச்சிற்கு உரிய சில விடயங்கள் நீக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் பைசர் முஸ்தபா அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவராக அஜித் டயஸ் நியமிக்கப்பட்டமை குறித்து தமக்கு அறிவிக்கப்படவில்லை என முஸ்தபா தெரிவித்திருந்தார்.
இவ்வாறான ஓர் நிலையில் கடந்த நில நாட்களாகவே அமைச்சிற்கு சென்று கடமைகளை செய்யாதிருந்த பைசர் முஸ்தபா சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றிருந்தார்.
நாடு திரும்பியவுடன் உடனடியாக தம்மை சந்திக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பைசர் முஸ்தபாவிற்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.
இரண்டு நாட்களின் பின்னர் முஸ்தபா நாடு திரும்புவார் எனவும், அதன் போது ஜனாதிபதியை சந்தித்து பேசுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சுப் பதவியை துறந்து மீளவும் சட்டத்தரணி தொழிலை முழு நேரமாக முன்னெடுக்க விரும்புவதாக அண்மையில் முஸ்தபா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.