இன்று வியாழக்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற வருடாந்த தேசிய காலை உணவு பிரார்த்தனைக் கூட்டத்தில் சீனாவின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தலாய் லாமாவும் கலந்து கொண்டிருந்தார்.
மேலும் இக்கூட்டத்தைத் தலைமை தாங்கிய ஒபாமா உரையாற்றுகையில் உலகில் நண்மையை விளைவிக்கக் கூடிய மதத்தின் சக்தி குறித்தே நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இன்று உலகில் பிரிவினை மற்றும் தீவிரவாதிகள் மதத்தின் பாதையைத் திசை திருப்பி வன்முறையை விதைப்பதற்கே பயன் படுத்தி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
சபைக்கு வந்திருந்த முக்கிய விருந்தினரான தலாய் லாமாவை வரவேற்றுத் தனது உரையை ஆரம்பித்த ஒபாமா உலகில் இரக்க உணர்வை எவ்வாறு பயிற்றுவிப்பது என்பது தொடர்பில் தலாய் லாமா தனக்கு சக்திவாய்ந்த உதாரணமாக இருந்து வருகின்றார் எனவும் நாம் அனைவரது கண்ணியம் மற்றும் சுதந்திரம் குறித்துப் பேசுவதற்கும் முக்கிய ஊக்குவிப்பாக இருந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். விருந்தினர் மத்தியில் அமர்ந்திருந்த தலாய் லாமா உரையாற்றவில்லை என்பதுடன் ஒபாமாவும் இவரும் சந்திப்பார்களா என்பது குறித்தும் வெள்ளை மாளிகை தெரிவிக்க மறுத்து விட்டது. ஏற்கனவே தலாய் லாமாவும் ஒபாமாவும் 3 முறை உத்தியோகபூர்வமாகச் சந்தித்துள்ளனர் என்பதுடன் இந்த அனைத்து சந்திப்புக்களும் சீனாவின் அதிருப்தியைச் சம்பாதித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சீனாவின் எதிர்ப்புக்குப் பதிலாக வெள்ளை மாளிகை விடுத்திருந்த மறுப்புரைகளில் இச்சந்திப்பானது சீனாவில் இருந்து திபேத்தின் விடுதலையை ஆதரிப்பது ஆகாது எனவும் ஆனால் சர்ச்சைக்குரிய சீன திபேத் பிராந்தியத்தில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து வலியுறுத்துவதற்காகவே எனவும் தெரிவிக்கப் பட்டிருந்தது. இதேவேளை இன்றைய பிரார்த்தனைக் கூட்டத்தில் ஒபாமா ஆற்றிய உரையில் மேலதிகமாக மதத்தின் பெயரால் யுத்தத்தை மேற்கொண்டு வருபவர்களை அமெரிக்கா தீவிரமாக எச்சரிக்கின்றது எனவும் பாகிஸ்தான் பள்ளியில் இருந்து பாரிஸின் வீதிகள் வரை முகம் கொடுத்த தீவிரவாதத் தாக்குதல் முதற்கொண்டு ஐரோப்பாவின் யூதர்களுக்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பு வரை அனைத்து மதத்தின் பெயரால் நிகழ்த்தப் படும் செயல்களும் ஒரு போதும் அனுமதிக்கப் பட முடியாது என்றும் கூறியுள்ளார்.
சுருக்கமாக உலகில் எந்த ஒரு கடவுளும் தீவிரவாதத்தை மன்னிப்பதில்லை எனவும் ஒபாமா தீர்க்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.