இதுவரை காலமும் இலங்கைத் தமிழருக்காக எனக் குரல் கொடுத்து தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய மத்திய அரசாங்கத்திற்கும் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து வந்த தமிழக அரசியல் கள நிலவரத்தில் தற்போது அமைதியானதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
முன்னரைப் போன்று இலங்கை அரசாங்கத்தின் தலைவர்கள், அமைச்சர்கள், விசேட பிரதிநிதிகள், அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் எனப் பல தரப்பினரும் தமிழகத்திற்கு அல்லது அந்நாட்டின் ஏதேனும் ஒரு பகுதிக்கு வருகை தரும் போது ஆயிரம் பேரை ஒன்று திரட்டி விமான நிலையத்திலும், அவர்கள் தங்கியிருக்கும் இடங்களிலும் கறுப்புக் கொடிகளைக் காட்டி ஆர்ப்பாட்டம் செய்வதை தமிழக அரசியல் தலைவர்கள் தற்போது முற்றாக நிறுத்தியுள்ளனர்.
அத்துடன் இலங்கையில் இடம்பெறும் சிறு சிறு விடயங்களுக்கும் மத்திய அரசாங்கத்திற்கு கடிதம் எழுதுவதையும், பத்திரிகைகளுக்கு அறிக்கை மற்றும் கவிதை எழுதுவதையும் அத்தலைவர்கள் நிறுத்தியுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை தமிழக மக்களும், அரசியல் தலைவர்களும், அங்குள்ள ஊடகவியலாளர்களும் நம்பிக்கையுடன் வரவேற்றுள்ளதை அவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடியதன் மூலமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.
குறிப்பாக இதுவரை காலமும் இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்து வந்த தமிழகத் தலைவர்களான கலைஞர் கருணாநிதி, வை. கோபாலசுவாமி, தொல் திருமாவளவன், பழ. நெடுமாறன், திரைப்பட நடிகர் சீமான் ஆகியோர் இப்போது அமைதியாக இருந்து வருகின்றனர்.
இவர்களில் சிலரைச் சந்தித்துரையாடிய போது புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துத் தாம் அமைதியைக் கடைப்பிடித்து வருவதாகத் தெரிவித்தனர்.
அதேபோன்று தமிழகத்திலுள்ள ஊடகங்களும் முன்னரைப் போலில்லாது இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக நம்பிக்கை தரும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
2006 ம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியா செல்லும் இலங்கை அரசியல்வாதிகள், அரசாங்கத்தின் அமைச்சர்கள், விசேட பிரதிநிதிகள், அதிகாரிகள் விளையாட்டு வீரர்கள் எனப் பல தரப்பினரும் எதிர்ப்புகளின் மத்தியிலேயே தமது இந்திய விஜயத்தைத் தொடர வேண்டிய நிலை காணப்பட்டது.
இந்நிலை 2015 ம் ஆண்டு ஜனவரி பத்தாம் திகதிக்குப் பின்னர் இல்லாமற் போயுள்ளதை அவதானிக்க முடிந்தது.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் கடந்த வாரம் சென்னை வந்தபோது அவரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அன்புடன் வரவேற்றுள்ளனர்.
அவர் எவ்விதமான பாதுகாப்புமின்றி மக்களுடன் மக்களாக விமான நிலையத்திலிருந்து வெளியேறிச் சென்றார். இதேபோன்றதொரு நிலைமையை கடந்த ஒரு மாத காலமாகக் காணமுடிகிறது.
சென்னையிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கடந்த நான்காம் திகதி இடம்பெற்ற எமது நாட்டின் சுதந்திர தின விழாவில் பல இந்தியப் பிரஜைகளும் கலந்து கொண்டிருந்தமை அங்கு மாற்றம் ஒன்று உருவாகியுள்ளமையை உணர்த்தியது.
அத்துடன் முன்னைய காலங்களைப் போலன்றி இவ்வருடம் தூதரகத்தில் பாதுகாப்புக் குறித்த எவ்விதமான பயமுமின்றி சுதந்திர தின விழா வெகு சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் கலந்து கொண்டார்.
இதேவேளை எதிர்வரும் 16ம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்க ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
மிக நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் எவ்விதமான சிறு எதிர்ப்பும் இன்றி இந்தியாவிற்குச் செல்லும் இலங்கைத் தலைவர் எனும் பெருமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலோ அல்லது இந்திய நாட்டின் எந்தவொரு பகுதியிலுமோ எவ்விதமான சிறு எதிர்ப்பும் இடம்பெறாத நிலையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.