Breaking
Fri. Nov 29th, 2024

காத்தான்குடி நகர சபை பிரிவில் டெங்கு காய்ச்சலினால் கடந்த இரண்டு தினங்களில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை காலை காத்தான்குடி ஆறாம் குறிச்சி அப்துல் ஜவாத் ஆலிம் வீதியைச் சேர்ந்த 7 வயதுடைய ஏ.ஸாயிதா ஸித்னா எனும் சிறுமியே காய்ச்சலினால் திடீரென உயிரிழந்துள்ளார்.

சில தினங்கள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த மேற்படி சிறுமி சனிக்கிழமை மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்ட போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த நிலையில் குறித்த சிறுமி அங்கு உயிரிழந்துள்ளார்.

இவரின் மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.கணேசநாதன் மேற்கொண்டார். குறித்த சிறுமி காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுவருகின்றார். இதேபோன்று டெங்கு காய்ச்சலினால் இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.

கடந்த 15 தினங்களுக்கு முன்னர் டெங்கு காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேற்படி இளைஞன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.

புதிய காத்தான்குடி கோழி வியாபாரி வீதியைச் சேர்ந்த 26 வயதான எம்.எச்.சிபான் என்னும் இளைஞனே இதில் உயிரிழந்துள்ளார். மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்து விட்டு விடுமுறையில் வீடு வந்தவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட பின்னர் வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டதாகவும் அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த மரணங்கள் தொடர்பில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

Related Post