நெலும் பொக்குன மாவத்தை என பெயர் மாற்றம் செய்யப்பட்ட முன்னய ஆனந்த குமாரசுவாமி மாவத்தைக்கு மீண்டும் பழைய பெயரே சூட்டப்பட்டுள்ளது.
நாளை முதல் குறித்த வீதிக்கு ஆனந்த குமாரசுவாமி மாவத்தை என்ற பெயரே அமுல்படுத்தப்படுத்தப்படும் என கொழும்பு மாநகர சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று இந்த செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான நிகழ்வொன்று நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளதுடன். கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம்.முசம்மில் இதற்கான அழைப்பை விடுத்துள்ளார்.
முன்னர் கிரின் பாத் எனவும். குறித்த பாதை அழைக்கப்பட்டது.
ஹோட்டன் சுற்றுவட்டம் தொடக்கம் பொது நூலகம் வரை ஆனந்த குமாரசுவாமி மாவத்தை அமைந்துள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலமாக குறித்த பாதையின் பெயர், கொழும்பு மாநகரசபையின் முன்னாள் ஆணையாளர் பத்ராணி ஜயவர்தனவினால் டிசம்பர் 15 திகதி முதல் மாற்றம் செய்யப்பட்டது.
நெலும் பொக்குன மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கத்தை நினைவு படுத்தும் வகையில், ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதன்படி, ஹோட்டன் பிளேஸ் சுற்றுவட்டமும், நெலும் பொக்குன சுற்றுவட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
எனினும் இந்த பெயர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டமைக்கு பிரதேச மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இலங்கையில் பிறந்த கலை வரலாற்று நிபுணரும், எழுத்தாளருமான ஆனந்த குமாரசுவாமியின் நினைவாக அந்த பாதைக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.