அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில், ஹண்ட்ஸ்வில்லே என்ற இடத்தில் தங்கி என்ஜினீயர் வேலை பார்த்து வருகிற தனது மகனை பார்ப்பதற்காக இந்தியரான சுரேஷ் பாய் படேல் (வயது 57) சென்றுள்ளார். கடந்த 6-ந் தேதி அந்த பகுதியில் சுரேஷ் பாய் படேல் சுற்றி திரிந்துள்ளார். இதைக்கண்ட ஒருவர் சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் ஒரு நபர் நடமாடுகிறார் என போலீசில் புகார் செய்து விட்டார்.
இதையடுத்து அவரை சுற்றி வளைத்த அமெரிக்க போலீசார், ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டனர்.அவருக்கோ ஆங்கிலம் தெரியாததால் பதில் அளிக்க முடியாமல், ‘நோ இங்கிலிஷ்’ என்று மட்டும் கூறி உள்ளார். உடனே ஒரு போலீஸ்காரர் அவரை பிடித்து தரையில் தள்ளிவிட்டார். இதில் அவர் முடங்கிப்போகிற அளவுக்கு காயம் அடைந்தார். இப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். இது தொடர்பான புகாரில், அவரை தள்ளிவிட்ட போலீஸ்காரர் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.
இதுபற்றி சுரேஷ் பாய் படேலின் மகன் சிராக் கூறுகையில், “எனது அப்பா ஓய்வில் இருக்கும் போது அந்த பகுதியை நடந்து சென்று பார்த்திருக்கிறார். இது வழக்கமான செயல்தான். என் அப்பாவுக்கு இந்தியும், குஜராத்தியும் தான் தெரியும். ஆங்கில மொழி தெரியாததால் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது “என்றார்.இப்போது சுரேஷ் பாய் படேலை இந்த நிலைக்கு தள்ளிய மேடிசன் போலீஸ் மீது வழக்கு தொடர சிராக் திட்டமிட்டுள்ளார்.