பாராளுமன்ற தேர்தலின் பிற்பாடு ஐந்து வருடங்கள் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்போம். அதனூடாக எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த நாட்டை பெற்றுக்கொடுப்போம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எமது அரசின் நூறுநாள் வேலைத்திட்டம் பாரிய சவால்மிக்கது. அதனை நிறைவேற்றுவதே எமது இலக்காகும். பொது இலக்குகளை நிறைவுகண்டு நூறு நாட்களின் பிற்பாடு பாராளுமன்ற தேர்தலுக்கு செல்வோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர்களான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட புதிய அரசின் அமைச்சர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு அமைச்சர்களான சஜித் பிரேமதாச, ரவி கருணாநாயக்க, டி.எம். சுவாமிநாதன், கயந்த கருணாதிலக்க, ரவூப் ஹக்கீம், ஹர்ஷ டி சில்வா மற்றும் எதிர்க்கட்சி சார்பில் தினேஸ் குணவர்த்தன எம்.பி. யும் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது றோயல் கல்லூரி பழைய மாணவர்களான புதிய அரசாங்கத்தின் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுகையில்,
கொழும்பு றோயல் கல்லூரி என்பது இலங்கையின் முதலாவது அரச பாடசாலையாகும். அது மாத்திரமின்றி ஆசியாவில் முதற் தர பாடசாலையாகவும் கணிக்கப்படுகின்றது. மும்மொழிகள் மூலம் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நான் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவனாவேன்.எனது குடும்பமே இந்த பாடசாலையின் கல்விபயின்றுள்ளது. இலங்கை வரலாற்றில் தேசிய அரசியலை வழிநடத்தக்கூடிய பாடசாலையாக றோயல் கல்லூரி திகழ்ந்துள்ளது.
அநகாரிக தர்மபால போன்றோர் இதற்கு சிறந்த உதாரண புருஷர்களாகும். றோயல் கல்லூரியினூடாக அரசியல், கல்வி, வணிகம், கலை மற்றும் மதங்கள் தொடர்பில் என பல செயற்பாடுகள் நாட்டில் முன்னெடுக்கப்பட்டன. மேற்குறித்த துறை சார்ந்த திறமையானவர்களை றோயல் கல்லூரி வெளிக்கொண்டு வந்தது.
றோயல் கல்லூரிக்கு நாட்டின் பல பாகங்களிலிருந்து கற்க வருகின்றனர். எனினும் நான் அத்தகைய கஷ்டங்களை அனுபவிக்கவில்லை. ஸ்ரீஜயவர்த்தனபுர கோட்டையிலிருந்தே நான் பாடசாலை வந்தேன்.
எனவே றோயல் கல்லூரி இந்நாட்டின் அரசியலை தீர்மானிக்க கூடியவர்களையும் வழிநடத்த கூடியவர்களையும் உருவாக்கி கொடுத்தது. அந்த பணிகளை தொடர்ந்தும் செய்து வருகின்றது.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன 1943 ஆம் ஆண்டு றோயல் கல்லூரிக்கு வருகை தந்தார். எதிர்க்கட்சியில் சுமார் 20 வருடங்களாக அனுபவங்களை பெற்று பொறுமையை கொண்டு இலங்கையின் ஜனாதிபதியாக தமது வெற்றி இலக்கை அடைந்து கொண்டார்.
இந்நிலையில் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய ஆட்சியை உருவாக்கியுள்ளோம். எமது அரசாங்கத்திற்கு உள்ள பிரதான இலக்காக 100 நாள் வேலைத்திட்டம் காணப்படுகின்றது. எமது அரசாங்கத்தினால் நூறு நாள் வேலைத்திட்டம் முழுமையாக நிறைவு பெற்ற பிற்பாடு பாராளுமன்ற தேர்தலுக்கு செல்வோம்.
நூறு நாள் வேலைத்திட்டம் எமக்கு உள்ள பாரிய சவாலாகும். குறித்த நூறு நாட்களின் பிற்பாடு பாராளுமன்ற தேர்தலுக்கு செல்வோம். இந்நிலையில் இந்த பாராளுமன்ற தேர்தலின் தொடர்பில் அனைவரும் எதிர்பார்ப்புக்களுடன் உள்ளனர்.
தேர்தலின் பிற்பாடு ஐ.தே. கட்சி ஆட்சி அமைக்குமா ? சுதந்திர கட்சி ஆட்சி அமைக்குமா ? என என்னிடம் பலர் வினவுகின்றனர். தேர்தலின் பிற்பாடு எந்த கட்சியும் ஆட்சி அமைக்கப்போவதில்லை. மாறாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்துடன் கூடிய தேசிய அரசாங்கமொன்றையே உருவாக்குவோம்.
இந்த தேசிய அரசினூடாக ஐந்து வருடங்கள் இந்நாட்டிற்கு உகந்த கல்வி முறைமையை அறிமுகப்படுத்தி சீரான பொருளாதார கொள்கையுடன் கூடிய நாட்டை உருவாக்குவோம். இளைஞர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்பினை பெற்று உரிய சம்பளத்தையும் பெற்றுக்கொடுப்போம். தற்போதைய இளைஞர்கள் வெளிநாட்டுக்கு சென்று உழைக்க வேண்டிய நிலைமையை ஒருபோதும் ஏற்படுத்த மாட்டோம். உள்நாட்டிலேயே உழைத்து வாழக்கூடிய சிறந்த பொருளாதார நிலைமையை ஏற்படுத்துவோம்.
தற்போதைய சிறுவர்களான எதிர்கால சந்ததியினருக்கும் வளமான நாட்டை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தினை இந்த ஐந்து வருடத்தில் முன்னெடுப்போம். அதன் பின்பு பாராளுமன்ற தேர்தலுக்கு சென்று அதன்போது ஐ.தே. கட்சி ஆட்சியையோ சுதந்திர கட்சி ஆட்சியையோ ஏற்படுத்த முடியும்.எனவே மாணவர்கள் ஒழுங்கான முறையில் கல்வி பயின்று திறமையானவர்களாக உருவாக்க வேண்டும் என்றார்.