நேற்று புதன்கிழமை ISIS இற்கு எதிரான யுத்தத்தில் இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நாடாளுமன்றத்தில் அனுமதி கோரியுள்ளார்.
இதன்போது சிரியாவிலும் ஈராக்கிலும் ISIS இற்கு எதிரான வான் தாக்குதல் அடிப்படையிலான யுத்தத்தில் அமெரிக்க மிக வலிமையாக இருப்பதாகவும் ISIS இயக்கம் தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது எனவும் ஒபாமா குறிப்பிட்டுள்ளதுடன் இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தேச கூட்டுத் தீர்மான வரைவு ஒன்றையும் தனிப்பட்ட கடிதம் ஒன்றையும் ஒபாமா அனுப்பியுள்ளார்.
நேற்று மதியம் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் ஒபாமா இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போது, ‘தற்போது எந்த ஒரு தவறையும் விடாது முடிவெடுக்க வேண்டிய நேரம்! ISIS இற்கு எதிரான யுத்தமானது சற்று கடினமானது தான். இன்னும் சில காலத்துக்கும் இந்த கடின நிலை நீடிக்கவே செய்யும்! எனவே வலிமையான எதிர்ப்பு தேவை! தற்போது எமது கூட்டணி தான் முற்றுகைப் போரை மேற்கொண்டு வருகின்றது. ISIL தற்காப்புக்காகவே போரிடுகின்றது. எனவே அவர்கள் தோல்வியை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றனர்.’ என்றுள்ளார்.
இதேவேளை ஈராக்கிலும் சிரியாவிலும் ISIS இற்கு எதிராக நன்கு திட்டமிடப் பட்ட விமானத் தாக்குதல்களுக்கும், தரை வழியாக முன்னேறி வரும் குர்து மற்றும் ஈராக்கிய படைகளுக்கு ஆதரவும் பயிற்சியும் அளிப்பதற்கும், மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குமே இராணுவ பலத்தை மேலும் அதிகளவில் பயன்படுத்த அங்கீகாரம் தேவைப் படுவதாகவும் நேரடியாக அமெரிக்க தரைப் படையை யுத்தத்தில் பயன்படுத்துவதற்காக அல்ல என்றும் ஒபாமா தெளிவு படுத்தியுள்ளார். அதாவது மத்திய கிழக்கில் அமெரிக்கா நேரடியாக இன்னொரு தரை வழிப் போரில் பங்கேற்பதில் அமெரிக்கர்களுக்கு உடன்பாடில்லை என்பதைத் தானும் ஒப்புக் கொள்வதாக ஒபாமா தெரிவித்துள்ளார். ஏற்கனவே ISIS மீதான அமெரிக்கக் கூட்டுப் படைகளின் வான் தாக்குதல் ஆரம்பித்து 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் போரினை இன்னமும் வலுப்படுத்த விசேட படையினரைக் குறித்த பகுதியில் பயன்படுத்த வேண்டிய தேவை இருப்பதை ஒபாமாவின் வேண்டுகோள் வெளிப்படுத்துகின்றது.
எனினும் ISIS அமைப்பு மீதான இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க இராணுவத்துக்கு மூன்று வருடங்களுக்கு மாத்திரமே அதிகாரமளிப்பது எனவும் ஒபாமாவின் திட்ட வரைவில் கூறப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.