முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய இருவரிடமும் கேள்விகளை கேட்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்காக காத்திருப்பதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, ஒரு சதி முயற்சியை மேற்கொண்டனர் என்று சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்துவதற்கான ஆலோசனையே பெற்றுக்கொள்ளப்படவிருக்கின்றன. இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளதாவது,
இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணை கோப்புகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த கோப்புகள் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க, கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா மற்றும் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலங்களை ஏற்கெனவே பதிவு செய்துள்ளனர்.
இந்த சதிப்புரட்சி முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படும் முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிடமும் பொலிஸார் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றுவிட்டால் தேர்தல் நடைபெற்ற ஜனவரி 8ஆம் திகதி மறுநாள் புரட்சியை ஏற்படுத்தி அவ்வாட்சியை கவிழ்ப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி,
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்டோர் சதிமுயற்சிகளை மேற்கொண்டனர் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பொலிஸில் கடந்த மாதம் முறைப்பாடொன்றை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.