Breaking
Thu. Nov 28th, 2024

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – இந்திய ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

இலங்கை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதலாவது வெளிநாட்டு சுற்றுப்பயணமாக நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது பாரியார் ஜெயந்தியுடன் இந்தியா சென்றுள்ளார்.

டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று மாலை சென்றடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிகளை, மத்திய சாலைப் போக்குவரத்து, கப்பல் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மத்திய அரசு சார்பில் வரவேற்றார்.

சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இன்று (16) காலை 10 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் செல்கிறார். அங்கு அவருக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. காலை 11.05 மணிக்கு நட்சத்திர விடுதி ஐடிசி மெளரியாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்திக்கிறார்.

அதையடுத்து, நண்பகல் 12.15 மணிக்கு ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். இதைத் தொடர்ந்து, இருதரப்பு நல்லறவு, ஒத்துழைப்பு தொடர்பாக இரு நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் பேச்சுவார்தை பிற்பகலில் நடைபெறவுள்ளது. அப்போது இரு நாடுகள் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு மீண்டும் செல்லும் ஜனாதிபதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறார். அதன் பிறகு, பிரணாப் முகர்ஜி இரவு 8 மணிக்கு அளிக்கும் அரசு விருந்தில் பங்கேற்கவுள்ளனர்.

Related Post