Breaking
Mon. Dec 23rd, 2024

 

மகாப்பொல வழங்கும் நிகல்வில் ஹுனைஸ் எம்.பி கருத்து…..

ஒரு நாட்டில் இடம்பெறுகின்ற புரட்சியைப் பொறுத்த மட்டில் அதாவது நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதாக இருக்கலாம் அல்லது அழிவுப் பாதையில் இட்டுச் செல்வதாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் அதில் பல்கலைக் கழக மாணவர்களின் பங்கு அதிகம் உள்ளது.

 தென் இலங்கையில் இடம் பெற்ற ஆயுதப் போராட்டமோ வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம் பெற்ற ஆயுதப் போராட்டமாக இருக்கலாம் இதன் ஆரம்பம் பல்கலைக் கழகத்திலிருந்து உருவாக்கப் பட்டது. இவ்வாறான ஆயுதப் போராட்டத்தை உருவாக்கியவர்கள் அல்லது வழிநடத்துபவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து உருவானவர்கள் எனவே நாம் இவ்வாறான விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

 தரம் 01 முதல் உயர்தரம் வரை கல்வி கற்பதற்கு இலங்கை அரசாங்கம் ஒரு மாணவனுக்கு பாடப்புத்தகம், சீருடை என கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்கின்றது. இவ்வாறு செலவு செய்ய வேண்டும் என்ற எந்த தேவையும் கட்டாயமும் அரசாங்கத்திற்கு இல்லை. வெளிநாடுகள் சிலவற்றை எடுத்துப் பார்த்தால் பாடப் புத்தகம், சீருடை, நுளைவுக் கட்டணம் என பணம் செலுத்திப் படிக்க வேண்டிய நிலை உள்ளது. எமக்கு கிடைத்திருக்கின்ற இந்த இலவசக் கல்வி பெரும் வெற்றியும் அருளுமாக உள்ளது. இதை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

 இங்கு வந்திருக்கின்ற அனைவரும் வட பகுதி மாணவர்;கள் அகதி முகாமில், குப்பி விளக்கில், பங்கர் குழிகளுக்குள் இருந்து படித்தவர்கள், யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போது பரீட்சைக்குத் தயாரானவர்கள் இன்று நீங்கள் பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளீர்கள். கஷ்டத்தை அனுபவித்தவர்கள் நீங்கள், இதை மறந்து விடக் கூடாது, கடந்து வந்த பாதையை, பட்ட கஷ்டத்தை மீட்டிப் பார்க்க வேண்டும்.

 பல்கலைக் கழகம் சென்றவுடன் நான் தான் பெரியவன் என்ற எண்ணமும் மமதையும் சிலருக்கு ஏற்படும் இவ் எண்ணம் அற்றவர்களாக நாம் இருக்க வேண்டும் அத்தோடு வழங்கப் படுகின்ற இந்த ‘மகாப்பொல’ பணம் வெளிநாட்டிலிருந்து கொட்டிய பணம் அல்ல எமது மக்களின் வரிப் பணம்தான் என்பதை மறந்து விடக் கூடாது. மக்களின் பணத்தால் படித்தோம், இந்த மக்களின் பணத்தால் தான் எமக்கு இந்த நிலை வந்துள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு நாளை பதவிக் கதிரையில் அமர்ந்திருக்கும் போது எம்மை நாடி வருபவர்களுக்கு நாம் பணியாற்ற வேண்டும், சிறந்த சேவையை வழங்க வேண்டும்.

 சாதி, மத, பேதம் பாராது பல்கலைக் கழகம் தெரிவு செய்யப் பட்டுள்ளீர்கள் சொல்லப்பட்ட சுற்று நிருபத்திற்கமைய தகுதியுள்ளதா? என்பதை மாத்திரம் பார்த்து இலங்கை அரசாங்கம் மகாப்பொல கொடுப்பனவு வழங்கும் போது அப்பணத்தைப் பெற்று அதில் கல்வி கற்ற நீங்களும் சாதி ,மத, பேதம் பார்காமல் அனைவருக்கும் சமமான சேவையை வழங்கவேண்டும் என்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தiணி ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார்.

 வவுனியா மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 117 மாணவர்களுக்கான மகாபொல கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு கடந்த 10ம் திகதி வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்படி விடயத்தினைத் தெரிவித்திருந்தார்.

இதில் அமைச்சர் றிஸாட் பதியுதீன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கல்வி மான்கள் உட்பட இன்னும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Post