Breaking
Tue. Dec 24th, 2024

அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுத களஞ்சியங்கள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

விசாரணையின் போது கோத்தபாய ராஜபக்ஷவுக்கு விசேட சலுகை எதுவும் வழங்கப்படவில்லை. எதிர்காலத்திலும் வழங்கப்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை மற்றும் பி.எம்.ஐ.சி.எச். ஆயுத களஞ்சியம் என்பவற்றிற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பாதுகாப்பு அமைச்சே தங்களுக்கு அனுமதி வழங்கியதாக, அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ள நிலையில் அது குறித்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளரை விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவரிடம் வாக்கு மூலம் பெறப்பட்ட போதும், அது குறித்து மேலும் தகவல் பெற அவகாசம் வேண்டுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோரியிருந்தார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் அதற்கு அவகாசம் வழங்க வேண்டியது பொலிஸ் விசாரணைகளுக்கு உட்பட வழி முறையாகும். விசாரணைக்காக சகலரும் பொலிஸூக்கோ சி.ஐ.டி.க்கோ அழைக்கப்படுவது கிடையாது.

விசேட ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அது குறித்து விசாரணை நடத்துவதற்கு பொலிஸூக்கு அழைக்கப்படுவதுண்டு. மற்ற சமயங்களில் சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கு சென்றே விசாரணை செய்யப்படும்.

இவ்வாறான தன்னியக்க ஆயுதங்களை வைத்திருக்க பாதுகாப்பு அமைச்சிற்கு அனுமதி வழங்க முடியுமா? அதற்கான அதிகாரம் பாதுகாப்பு அமைச்சிற்கு இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை இடம்பெறுகிறது” என்றுள்ளார்.

Related Post