முசலி பிரதேச செயலகத்துக்குரிய மறிச்சிக்கட்டி மரைக்கார்தீவு பகுதியில் 73 குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ள காணி வில்பத்து சரணாலயத்துக்குரிய பாதுகாப்பு பிரதேசம் என்பது நீதிமன்றத்தில் உறுதியானால் அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
இவ்வாறு வெளியேறும் 73 குடும்பங்களுக்கும் மாற்றுக் காணிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். வில்பத்து சரணாலயத்தின் எல்லை மோதரகம் ஆறு என்ற ஆற்றுடன் முடிவடைகிறது.
அதற்கு வெளியே முசலி பிரதேச செயலகத்துக்குரிய மறிச்சுகட்டி, மரைக்கார்தீவு பகுதியில் 73 குடும்பங்கள் மீளக் குடியேறியுள்ளன. இவர்கள் அனைவரும் சரணாலயத்தினுள் அத்துமீறி குடியேறியுள்ளதாக குற்றச்சாட்டு க்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் இப்பகுதிக்கு ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்றார்.
1990 களில் முசலி பகுதியிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது எமது மூதாதையர்களுடன் வாழ்ந்த அதே பகுதிக்குத்தான் நாம் மீளக்குடியமர வந்துள்ளோம். எம்மிடம் காணி உறுதிகளும், பேர்மிட்டுகளும் உள்ளன.
அன்று எமது மூதாதையர் இந்தக் காணிகளில் குடியிருக்கும் போது சரணாலயத்துக்குரிய பாதுகாப்பு பிரதேசம் என எவரும் கூறவில்லை. எனவே எமக்கு இதே இடத்தில் ஆகக் குறைந்தது 40 ஏக்கர் காணியை தந்துதவ வேண்டும் என்றும் அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர்.இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவிக்கையில், மேற்படி 73 குடும்பங்களும் குடியிருக்கும் பகுதி சரணாலயத்துக்குரிய பாதுகாப்பு பிரதேசமா இல்லையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும்.
உண்மையில் சரணாலயத்துக் குரிய பாதுகாப்பு பிரதேசம் என்பது நீதிமன்றத்தின் மூலம் உறுதியானால் அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டு மென நான் அவர்களுக்கு கூறியிருக்கிறேன். எனினும் அவர்கள் இவ்வாறு வெளியேறின் அவர்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
சரணாலயத்தினுள் 22 ஹெக்டயார் நிலப்பரப்பை சுத்தம் செய்து அதில் முஸ்லிம் குடியிருப்புகளை அமைத்து வருவதாக சில சேனாக்கள் குற்றம் சுமத்துகின்றன. இது முற்றிலும் தவறானது என்று கூறிய அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன், எழுவன்குளம் வழியாக வில்பத்து சரணாலய பகுதிக்குச் சென்று சரணாலய எல்லைவரை ஊடகவியலாளர்களுக்கு காண்பித்தார்.