முஸ்லிம் மக்களுக்கு ஆதரவான எனது குரலை நசுக்குவதற்காகவே பொதுபலசேனா அமைப்பினர் எனது அமைச்சுக்குள் நுழைந்தார்கள். ஆனால் மேலும் ஒருபடி மேலே சென்று பொதுபல சேனாவின் அடாவடித்தனத்துக்கு எதிராக நான் குரல் கொடுப்பேன்.அதற்காக எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ அவறையெல்லாம் நான் மேற்கொள்வேன். இந்த நடவடிக்கைகளுக்கு எனது அமைச்சுப் பதவி தடையாக இருந்தால் அதனையும் துறப்பதற்கும் நான் தயாராக இருக்கின்றேன். நாட்டில் சிறுபான்மையினர் கௌரவமாக வாழ்வதற்காக எவ்வாறான தியாகத்தையும் மேற்கொள்வதற்கும் நான் தயாராக இருக்கின்றேன் என்று கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார்.
அவர் வழங்கிய செவ்வியின் முழு விபரம் கீழே தரப்படுகிறது.
கேள்வி: அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நீங்கள் இருக்கின்ற போதும், பொதுபலசேனா அமைப்பு உங்களுடைய அமைச்சில் அத்துமீறி நுழைந்து அடாவடித்தனத்தை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
பதில்: பொதுபலசேனா அமைப்பு தொடர்ச்சியாக கடந்த ஒன்றரை வருடமாக நாட்டில் விஷக் கிருமிபோல் செயற்பட்டு வருகின்றது. நாட்டிலுள்ள பௌத்த மக்களையும் சிறுபான்மை மக்களுக்குமிடையில் பிரச்சினையை ஏற்படுத்துகின்றார்கள். குறிப்பாக, முஸ்லிம் மக்களையும் பௌத்த மக்களையும் மோதவைத்து இனக் கலவரத்தை ஏற்படுத்த முனைகின்றார்கள். இதன் மூலம் முஸ்லிம் மக்களின் கல்வி, பொருளாதாரம், கலாசாரம் என்பவற்றை அழிக்கும் செயற்பாட்டையே பொதுபலசேனா மேற்கொண்டு வருகின்றது.பொதுபலசேனா அமைப்பு ஆரம்பிக்கும் போது ஹலால் பிரச்சினையை கையில் எடுத்தார்கள். பின்னர் முஸ்லிம் பெண்களின் உடை, பள்ளிவாசல், முஸ்லிம் மத்ரஸாக்கள் தொடர்பில் பொய்யான கருத்துக்கள் இறுதியாக குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதாக தவறான கருத்துக்களை வெளியிடுகின்றார்கள். அதாவது, ஏனைய மதத்தவர் ஒருவருக்கு உணவு வழங்கும்போது மூன்று முறை எச்சில் துப்பிவிட்டு வழங்கவேண்டும் என்று குர் ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தவறான கருத்துக்களைப் பரப்புகின்றார்கள். அதேபோல், பிற மதத்தவர்களின் காணிகளை அபகரிப்பதற்காக பொய் கூறி ஏமாற்றி அந்தக் காணிகளைப் பெறமுடியும் என்று குர் ஆனில் கூறியுள்ளதாக பொய்யான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவை அனைத்தும் முற்று முழுதான பொய்க் கருத்துக்களாகும். இவர்கள் கூறுவதைப்போல் குர்ஆனில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஏனைய மதத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றுதான் குர் ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக முஸ்லிம்களுக்கோ அல்லது ஏனைய இனத்தவர்களுக்கோ உதவி செய்யுங்கள் என்றுகூடத் தெரிவிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த மனிதர்களுக்கும் நன்மை செய்யுங்கள், உதவி செய்யுங்கள் என்றுதான் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுபலசேனா, ஹலாலை ஓர் தவறான விடயமாக பௌத்த மக்கள் மத்தியில் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. முஸ்லிம்கள் உணவுகளை சூனியம் செய்துவிட்டு வழங்குகின்றார்கள் என்ற தவறான கருத்தை தெரிவித்து வருகின்றார்கள். அதேபோல் வில்பத்துப் பிரதேசத்தில் 20 ஆயிரம் ஹெக்டேயர் பரப்பிலான காணிகளை அழித்து முஸ்லிம் மக்கள் குடியமர்த்தப்படுவதாகவும் கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், பள்ளிவாசல்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், பொய்யான கருத்துக்களை பொதுபலசேனா அமைப்பு தெரிவித்து வருகின்றது. எனவே, இந்தக் கருத்துக்கள் யாவும் தவறானவை என்பதை மக்கள் மத்தியில் பொது பலசேனா தெரிவிக்க வேண்டும்.இல்லை எனில், 500 மில்லியன் நஷ்டஈடு கேட்டு நான் வழக்குத் தொடரப்போவதாக அவர்களிடம் தெரிவித்துள்ளேன். ஆனால் அவர்கள் அதற்கு இதுவரை பதிலளிக்கவில்லை. நான் அவர்களுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளேன். அந்தக் கால அவகாசம் கடந்த பின்னர் நான் குறித்த வழக்கைத் தொடருவேன்.
அரசாங்க அமைச்சராக நான் இருந்தும் இவர்களுடைய அடாவடித் தனத்துக்க எதிராக நான் பேசிவருவதனாலேயே, என்னுடைய அமைச்சுக்குள் பொதுபலசேனா பிரவேசித்துள்ளது. அதாவது, இவர்கள் தமது சக்தியை வெளிப்படுத்தி என்னுடைய குரலை நசுக்க முயல்கின்றார்கள். இதனால்த்தான் அநாகரிகமான முறையில் அமைச்சுக்குள் பிரவேசித்துள்ளார்கள். இந்த விடயத்தைக் கேள்விப்பட்டு நான் அமைச்சுக்கு வந்தபோது, அவர்கள் என்னை சந்திக்க விரும்பினார்கள்.ஆனால் நான் அவர்களைச் சந்திக்கவில்லை. என்னை சாதாரணமான ஒருவர் கூட சந்திக்கமுடியும். அதற்கு அனுமதி தேவையில்லை. ஆனால் பொதுபல சேனாவினர் அமைச்சுக்குள் பிரவேசித்த விதம் தவறானது. அதனாலேயே நான் அவர்களைச் சந்திக்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் எனது பணியாளர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்கள். எனது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டுள்ளேன். சபாநாயகருக்கம் எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் கடிதம் எழுதவுள்ளேன்.
கேள்வி: உங்களது அமைச்சுக்குள் நுழைந்து அடாவடி மேற்கொண்ட பொதுபலசேனா அமைப்பினர் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அமைச்சரவை அந்தஸ்துள்ள ஓர் அமைச்சர் என்ற வகையில் இதனை எவ்வாறு நீங்கள் நோக்குகின்றீர்கள்?
பதில்: எனது அமைச்சில் நுழைந்தவர்கள் மட்டுமன்றி,கிராண்ட்பாஸ் பள்ளிவாசலை உடைத்தவர்களும் இதுவரை கைது செய்யப்படவில்லை. எதனைச் செய்தாலும் யாரும் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற வகையில்தான் இந்த அமைப்புகளின் செயற்பாடுகள் காணப்படுகின்றன. பௌத்தர்கள் அனைவரும் உத்தியோகபூர்வமற்ற பொலிஸாராக மாறவேண்டும் என்று பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.சிறுபான்மை இனத்தவரை அடக்க வேண்டும் என்பதற்காகவே இவர்கள் இவ்வாறு தெரிவிக்கின்றார்கள்.இந்தக் கருத்தே அவர்களைக் கைது செய்வதற்கு தகுந்த விடயமாக அமைந்துள்ளது. ஒரு ஜனநாயக நாட்டில் பிறிதொரு உத்தியோகபூர்வமற்ற பொலிஸாரை உருவாக்க முடியாது.
கேள்வி: இந்த விடயங்கள் தொடர்பில் அமைச்சரவையில் நீங்கள் விவாதித்தீர்களா ?
பதில்: அமைச்சரவையில் நான் இந்த விடயம் தொடர்பில் விவாதிக்கவுள்ளேன். பொதுபலசேனாவின் செயற்பாடுகளை நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். ஜனாதிபதியிடமும் முறையிட்டுள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரிடமும் கேட்டுக்கொண்டுள்ளேன். எனது அமைச்சுக்குள் பொதுபலசேனாவினர் நுழைந்த சம்பவம் அவர்களது அடாவடித்தனத்தின் அதி உச்ச நிலையையே காட்டுகின்றது. அமைச்சரவை அந்தஸ்துள்ள ஓர் அமைச்சரின் அலுவலகத்துக்குள் நுழைந்து அடாவடித்தனத்தை மேற்கொள்கின்றார்கள் என்றால்,சாதாரண மக்களின் நிலை எவ்வாறிருக்கும் என்று எண்ணி பொதுமக்கள் அச்சப்படுகின்றார்கள். எனவே,பொதுமக்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியிடமும் முறையிட்டுள்ளேன்.
கேள்வி: பொதுபலசேனா அமைப்புக்கு அரசாங்கத்தின் அனுசரணை இருப்பதனால்தான், பொலிஸார் அவர்கள் விடயத்தில் தலையிடுவதில்லை என்ற கருத்து ஒன்று நிலவுகின்றதே?
பதில்: அவ்வாறான கருத்தொன்று பொதுமக்கள் மத்தியில் காணப்படுகின்றது. ஆனால், தாங்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றுவோம் என்று அண்மையில் பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.பௌத்த ஆதரவின்றி ஜனாதிபதியால் மீண்டும் தேர்தலில் வெல்ல முடியுமா? என்று சவால் விடுகின்றார்கள். அதேபோல் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு உதவியுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக் ஷவுக்கு எதிராகவும் கருத்து வெளியிட்டுள்ளார்கள். இவ்வாறு பொதுபலசேனாவின் நிலைப்பாடு மாற்றமடைந்து கொண்டே செல்கின்றது. எனவே, எதிர்காலத்தில் அரசாங்கத்துக்கு எதிராகவும் இவர்கள் செயற்படுவார்கள்.அண்மையில் பொதுபலசேனா அமைப்பினர் பௌத்த துறவி ஒருவரை துரத்திச் சென்று ‘ஐ பாட்‘ ஆல் தாக்கிய சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. சிறுபான்மையினரின் அடையாளங்களையும், மதங்களையும் அழிப்பதுடன்,சிறுபான்மையினருக்கு இந்த நாடு சொந்தமில்லை. இது ஒரு பௌத்த நாடு என்று தெரிவித்த வந்த பொதுபலசேனா, இப்பொழுது அவர்களது இனத்துடனேயே மோதுகின்ற நிலை உருவாகியுள்ளது. ஏனெனில், இவர்கள் ஓர் பொய்யான அமைப்பினர். இவர்கள் மத்தியில் எந்தவொரு உண்மையும் இல்லை. விடுதலைப் புலிகளை விடவும் போசமான ஒரு நிலைமையை இந்த நாட்டில் கொண்டுவர பொதுபலசேனாவினர் முயற்சிக்கின்றார்கள்.முப்பது வருட யுத்தத்தின் பின்னர் நிம்மதியான நிலை ஏற்படும் என்று மக்கள் சந்தோசமாக இருந்தார்கள்.நிம்மதியாக தொழிற் செய்யலாம், பிள்ளைகளுக்கு கல்வி புகட்டலாம் என்று மக்கள் எண்ணியிருந்த வேளை மிகவும் மோசமான நிலையை பொதுபலசேனா அமைப்பு உருவாக்கியுள்ளது.
முஸ்லிம்களின் மார்க்கம், உணவு, உடை என அனைத்தையும் கேவலமாகப் பேசுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 20 இலட்சம் முஸ்லிம்களும் மிகவும் வெறுப்புடன் வாழுகின்ற சூழலை பொதுபலசேனா உருவாக்கியுள்ளது. குர் ஆனைப்பற்றிப் பேசுவதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். குர் ஆனைப் பற்றிப் பேசுவதற்கு இவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ‘முஹமட் வட்டுறக விஜித தேரர்‘என்ற பௌத்த துறவி தொடர்பில் பேசுகின்றார்கள். ‘முஹமட்‘ என்பது எமது நபிகள் நாயகத்தின் பெயர்.அதனை உச்சரிப்பதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ‘முஹமட் வட்டுறக விஜித தேரர்‘ என்று குறித்த துறவியை அழைப்பதாயின் அவரின் பிறப்பு சான்றிதழை எம்மிடம் உறுதிப்படுத்த வேண்டும். எனவே இவ்வாறான செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபடுவதை இவர்கள் தவிர்க்க வேண்டும். பொதுபலசேனாவின் செயற்பாடுகளுக்கு கண்மூடித்தனமாகப் பதில் வழங்காமல் நாங்கள் சட்ட ரீதியில் பதில் வழங்கவுள்ளோம். உதாரணமாக மன்னார் மறிச்சுக்கட்டியில் இடம்பெற்ற சம்பவம் குறித்து அந்த மக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களது மதவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக நாட்டு மக்கள் சட்டரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன். இதனால் அந்த மக்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு உதவி செய்ய நாங்கள் தயாராக இருக்கின்றோம். எனது குரலை நசுக்குவதற்காகவே பொதுபலசேனா அமைப்பினர் எனது அமைச்சுக்குள் நுழைந்தார்கள். ஆனால் மேலும் ஒருபடி மேலே சென்று பொதுபல சேனாவின் அடாவடித்தனத்தக்கு எதிராக நான் குரல் கொடுப்பேன்.அதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ அவறையெல்லாம் நான் மேற்கொள்வேன். இந்த நடவடிக்கைகளுக்கு எனது அமைச்சு தடையாக இருந்தால் அதனையும் துறப்பதற்கும் நான் தயாராக இருக்கின்றேன். நாட்டில் சிறுபான்மையினர் கௌரவமாக வாழ்வதற்காக எவ்வாறான தியாகத்தையும் மேற்கொள்வதற்கும் நான் தயாராக இருக்கின்றேன்.
கேள்வி: வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவதற்கு தடையாக இப்பொழுது இருப்பது என்ன?
பதில்: வட மாகாணத்தில் மெனிக்பாம் முகாம்களில் மக்கள் இருந்த போது நான் அமைச்சராக இருந்தேன். பல உதவிகளையும் வழங்கி, 25 ஆயிரம் ரூபா உதவித் தொகையும் வழங்கி மீளக் குடியமர்த்தியிருந்தோம். அந்த மக்கள் தமது சொந்தக் காணிகளிலேயே குடியமர்த்தப்பட்டார்கள். இது குறுகிய கால இடப்பெயர்வு என்பதால் அவர்களை மீள் குடியமர்த்துவது சாத்தியமாக அமைந்திருந்தது. ஆனால், முஸ்லிம் மக்களின் இடப்பெயர்வைப் பொறுத்தவரை 22 வருடங்கள் கடந்து விட்டன. இதனால் அவர்களது பிரதேசங்கள் காடுகளாகக் காட்சியளிக்கின்றன. காடுகள் வளர்ந்து 6 அடிக்கு மேல் இருந்தால், அவை சொந்தக் காணிகளாக இருந்தாலும்,வனவள அமைச்சுக்குச் சொந்தமானதாகிவிடும். பல்வேறு நடைமுறைகளின் பின்னர் அதனை அவர்களிடம் மீளப்பெற்றே மக்களிடம் வழங்க முடியும். இது ஒரு சிலரின் பிரச்சினை இல்லை. 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களின் காணிகள் இவ்வாறு மீளப்பெறவேண்டியுள்ளன.எனவே, இவ்வாறான நடைமுறைகளின் போதும்,காணிகளைத் துப்புரவு செய்யும்போதும், மக்கள் தமது காணிகளை அடையாளம் காட்டும்போதும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, இந்த விடயத்தில் அரசாங்கமும், புதிதாக நியமிக்கப்பட்ட முதலமைச்சரும் முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்துக்கு ஓர் மாற்றுத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கின்றேன். அதற்கு எனது பூரண ஒத்துழைப்பை வழங்கவும் நான் தயாராக இருக்கின்றேன்.
கேள்வி: வில்பத்து காணிப் பிரச்சினை தொடர்பில் உங்களது செயற்பாடு தவறானது என்று அமைச்சரவை அமைச்சர்களான விமல் வீரவங்ச மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளார்கள். இது தொடர்பில் நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?
பதில்: அவ்வாறு அவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தால் அது தவறான விடயமாகும். அவர்கள், என்மீது குற்றச்சாட்டை தெரிவிக்கின்றபோது என்னுடன் கலந்துரையாடியிருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கருத்து வெளிட்டிருக்கும் செயலானது அமைச்சரவைக்கு அவர்கள் ஒத்துழைப்பை வழங்கவில்லை என்பதாகவே அமையும். எனவே எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் நான் அவர்களுக்கு விளக்கமளிப்பேன். நாடாளுமன்றத்திலும் இந்த விடயம் தொடர்பில் நான் உரையாற்றவுள்ளேன்.
தமிழ்பேசும் மக்களுக்கு நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், தமிழ் மக்களின் விரோதியாக நான் ஒரு காலத்தில் காட்டப்பட்டேன். ஆனால், நான் அவ்வாறானவன் இல்லை. புனர்வாழ்வு அமைச்சராக நான் இருந்த சந்தர்ப்பதத்தில் மனிதாவிமானத்துடன் செயற்பட்டு வந்தேன். எனவே எதிர்காலத்தில் தமிழ் பேசும் மக்கள் யாவரும் எந்தவொரு பிரிவினையும் இல்லாமல் வாழ்வதற்கு தமிழ்பேசும் தலைமைகள் என்னுடன் ஒத்துழைக்க வேண்டும். எனவே, தமிழ் பேசும் மக்களுக்கு ஓர் நியாயமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு என்னாலான பங்களிப்பை வழங்குவதற்கு நானும் எனது கட்சியும் தயாராக இருக்கின்றோம்.
எஸ்.கணேசன் எஸ். ரகுதீஸ்