Breaking
Tue. Dec 24th, 2024

பிரிந்து போயிருக்கின்ற அனைத்து முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றிணைக்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஏறாவூரில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் கௌரவிப்பு வைபவத்தின் போது உரையாற்றுகையிலேயே மாகாண சபை உறுப்பினர் அமீர் அலி மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அமீர் அலி பிரிந்து போயிருக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைவர்கள், முஸ்லிம் அரசியல் கட்சிகளை ஓரணியில் சேர்க்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம் காங்கிரசுக்குண்டு. அந்த பொறுப்பை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்ய வேண்டும்.

இந்த வைபவத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் றவூப் ஹக்கீம் கலந்து கொண்டுள்ளதால் இந்த வேண்டுகோளை விடுக்கின்றேன்.தற்போது முஸ்லிம் சமூகம் சந்தித்து வருகின்ற எதிர்காலத்தில் சந்திக்கப் போகின்ற பயங்கரமான சூழலுக்கு முகம் கொடுப்பதற்காக நாம் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்று பட வேண்டியுள்ளது.

முன்பும் கொழும்பில் நடைபெற்ற வைபவமொன்றில் அனைவரும் ஒன்றுபடுவதன் அவசியத்தை பற்றி பேசியுள்ளேன். அதையே தற்போதும் நான் கூறி வைக்க விரும்புகின்றேன்.

பிரிந்து போயிருக்கின்ற அனைத்து முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் முஸ்லிம் கட்சிகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றினைக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

தற்காலத்தில் ஏறாவூரில் பலமான அரசியல் தலைமைத்துவமுள்ளது. என்றுமில்லாதவாறு ஏறாவூரில் இந்த நிலை காணப்படுகின்றது. ஒரு முழுமையான அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் ஒருவரும், மாகாணத்தில் ஒரு மாகாண அமைச்சரும், அதே போன்று மாகாண பிரதி தவிசாளரும், பிரதேசத்தில் அனைவராலும் நன்கு அறியப்பட்ட நகர சபை தலைவர் என இவ்வாறு இந்த ஏறாவூர் பிரதேசத்தில் பலமான அரசியல் சூழல் காணப்படுகின்றது. இந்த சூழலை வைத்து இந்த பிரதேசத்தின் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

இன்று கௌரவிக்கப்பட்டுள்ள இந்த பிரமுகர்கள் இந்த பிரசேத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு துறைகளிலும் பாடுபட்டவர்கள். அவர்களின் தியாகம்தான் இந்த ஏறாவூரின் வளர்ச்சியாகும் என அவர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.

Related Post