வடக்கு கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் ஐ.தே. கட்சிக்கே வாக்களிக்கின்றனர். ஆனால் இன்று வட கிழக்கிற்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்கள் பேரினவாதிகளின் இனவாத செயல்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றபோது முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற ஐ.தே.கட்சி ஏன் பேசாமல் இருக்கிறது? என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இலங்கையிலுள்ள 20 இலட்சம் முஸ்லிம்களில் மூன்றில் இரண்டு பங்கினர் வடகிழக்குக்கு வெளியிலேயே வாழ்கின்றனர். முஸ்லிம் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் அவர்களது வாக்கு வங்கி வட கிழக்கிலேயே இருக்கிறது. வடகிழக்குக்கு வெளியே ஐ.தே. கட்சிக்கு வாக்களித்த முஸ்லிம் மக்கள் கட்சியிடமிருந்து அபிவிருத்தியை எதிர்பார்க்காமல் இருக்கலாம். ஆனால் இந்த இக்கட்டான காலகட்டத்தில் முஸ்லிம்களுக்காக பேசுகின்ற பணியைக் கூட ஏன் அவர்களால் செய்ய முடியாமல் இருக்கிறது.
பாராளுமன்றத்தில் எப்போதாவது ஐ.தே.கட்சி முஸ்லிம்களுக்காக வாய்திறந்தால் அதில் அரைவாசி நேரம் முஸ்லிம் அமைச்சர்களை ஏசுவதிலேயே செலவழிகிறது. முஸ்லிம் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்குரிய விடயமாகும். ஆனால் ஐ.தே.க. முஸ்லிம்களிடம் வாக்கு கோருவது முஸ்லிம்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்ற போது முஸ்லிம் அமைச்சர்களுக்கு ஏசுவதற்காகவா என்று வினவ விரும்புகின்றோம்.
இன்று முஸ்லிம் வாக்குகளில் பெரும்பாலும் தங்கியிருக்காத ஆளும் கட்சியில் இருக்கின்ற அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, டிலான் பெரேரா, ராஜித சேனாரத்ன, ரெஜினோல்கூரே, நிமல் சிறிபால டி சில்வா, அதாவுத செனவிரத்ன, ஜனக பண்டார தென்னகோன் மற்றும் பிரதமர் டி.எம்.ஜயரத்ன போன்றவர்கள் முஸ்லிம்களுக்காக பலமாக குரல் கொடுக்கின்ற போது ஐ.தே.கட்சி வாய்மூடியிருப்பதையிட்டு வாக்களிக்கின்ற முஸ்லிம்கள் ஏன் கேள்வி எழுப்பக் கூடாது.
முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி ரணில் விக்கிரமசிங்க இரண்டொரு முறை பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார். இதில் பாதி நேரம் முஸ்லிம் அமைச்சர்களுக்கு ஏசுவதிலேயே செலவிட்டிருக்கின்றார்.
முஸ்லிம்களின் பிரச்சினை பற்றி கரு ஜயசூரிய பேசவில்லை. திஸ்ஸ அத்தநாயக்க பேசவில்லை. சஜித் பிரேமதாஸ பேசவில்லை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
வாக்களித்தாலும் வாக்களிக்கா விட்டாலும் எதையாவது பேச வேண்டுமென்றால் அதை முஸ்லிம் அமைச்சர்கள் தான் செய்ய வேண்டும். ஏச்சு வாங்குவதென்றாலும் முஸ்லிம் அமைச்சர்கள் தான் வாங்க வேண்டும் என்கின்ற நிலைமை இந்த சமுதாயத்தை பேரினவாத கட்சிகள் இன்னும் ஏமாற்றுவதற்கே துணை போகிறது.
எனவே முஸ்லிம் சமுதாயம் சிந்தித்து தமக்கென்று சொந்தக் காலில் நிற்கக் கூடிய பிரதிநிதித்துவங்களை உருவாக்க வேண்டும். இன்று இருக்கின்ற பிரதிநிதித்துவங்களுள் உண்மையாகவே சமுதாயத்துக்கு உழைக்கின்றவர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் புதியவர்களையும் இணைத்து தமது எதிர்கால பிரதிநிதிகளாக்குவதற்கு முயற்சிக்க வேண்டும்.
அதே நேரம் யார் யாரெல்லாம் முஸ்லிம் வாக்கு களைப் பெற்றுக்கொண்டு கதிரைகளை சூடாக்குகிறார்களோ அவர்களை ஓய்வெடுக்க அனுப்ப வேண்டும். ஒட்டு மொத்தத்தில் யாரும் எதுவும் செய் யவில்லை என்பது தான் முஸ்லிம் சமுதாயத்தின் தீர் ப்பென்றால் புதியவர்களையாவது முழுமையாகக் கொண்டு வரவேண்டும். இவை எதுவுமில்லாமல் வட கிழக்குக்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்கள் ஐ.தே. க.வுக்கு வாக்களித்து விட்டு தமக்காக பேசுவதற்கு யா ருமில்லையென்று அல்லல்படும் நிலை இனிமே லும் தொடரக் கூடாது. (வீரகேசரி 24-05-2014 ஏ.ஆர்.ஏ. பரீல்)