இலங்கை போர்ச் சூழலில் இருந்து விடுபட்டும் பொருளாதார நிலையில் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. ஒன்றுபட்ட நாட்டினுள் சமூக, பொருளாதார அபிவிருத்தியினை வென்றெடுக்க வேண்டு மாயின் அனைத்து கட்சிகளினதும் புரிந்துணர்வும் ஒற்றுமையும் அவசியம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்ற தேர்தலின் பின்னரும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்த தேசிய அரசாங்கத்தினையே கட்டியெழுப்ப வேண்டும்.
மக்களின் பிரச்சினைகளை தீர்க்க தேசிய அரசே ஒரேவழி எனவும் பிரதமர் தெரிவித்தார்.சக்தியினால் வலுப்பெறும் இலங்கை எனும் தொனிப்பொருளில் மின்சக்தி, எரிசக்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஒரு நாடு பொருளாதார ரீதியிலும் சமூகரீதியிலும் வளர்ச்சியடைய வேண்டுமாயின் அந்நாட்டில் உணவு, நீர் ஆகிய இரு பிரதான காரணிகலும் வலுப்படுத்தப்பட வேண்டும். இன்றைய 21 வது நூற்றாண்டில் உணவு, நீர் ஆகிய காரணிகளுக்கு அப்பால் மின்வலு பிரதான அங்கம் வகிக்கின்றது. உலகின் அனைத்து நாடுகளும் மின்வலுவினை வலுப்படுத்திக்கொள்வதிலேயே அக்கறை செலுத்துகின்றன. மின்வலுவுடன் தொடர்புடைய எரிபொருள் இன்று உலகத்தினை தீர்மானிக்கின்றது. அதன் காரணத்தினாலேயே அமெரிக்கா போன்ற நாடுகள் எரிபொருளை தன்வசம் சைத்துக்கொள்ள மத்திய கிழக்கு நாடுகளை தமது கட்டுப்பாட்டினுள் வைத்துள்ளன. மத்திய கிழக்கு நாடுகளுடன் அரசியல் ரீதியிலும் அடக்கு முறை மூலமாகவும் தொடர்புகளை வைத்திருக்கின்றதற்கான ஒரே காரணம் எண்ணெய் வளத்தினை பெற்றுக்கொள்வதேயாகும்.
இந்நிலையில் இலங்கை கடந்த காலங்களில் பொருளாதார ரீதியிலும் அபிவிருத்தி மட்டத்திலும் தனிநபர் பொருளாதார வளர்ச்சியிலும் பின்தங்கியே இருந்தது. இன்று அதன் தாக்கம் உள்ளது. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எம் அனைவரினதும் இணைப்பில் இன்று நாட்டில் மாற்றம் ஒன்றினை ஏற்படுத்தும் முயற்சியினை எடுத்துள்ளோம். நாட்டினை சிறப்பானதொரு பாதையில் கொண்டு செல்ல நாம் ஒன்றிணைய வேண்டும். அதன் முதற்கட்டத்தில் நாம் தேசிய அரசாக வெற்றி கண்டுள்ளோம். அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஏற்பட்ட மாற்றத்தின் மூலம் மக்கள் உணரக்கூடிய வகையில் பொருளாதார சலுகைகளை வழங்கியிருக்கின்றோம்.
அதேபோல் நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சியினை ஏற்படுத்தி நாட்டினையும் சமூகத்தினையும் மேம்படுத்த வேண்டுமாயின் அடுத்த பாராளுமன்றத்தினையும் அனைத்து கட்சிகளின் கூட்டு ஆதரவுடன் அமைத்துக்கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதார சிக்கல்களுக்கும் மக்கள் பிரச்சினைக்கும் ஒரே தீர்வு தேசிய அரசாங்கமே. அதனை ஏற்படுத்துவது தொடர்பில் சகல கட்சிகளுமே தீர்மானமெடுக்க வேண்டும். நாம் ஆரம்பத்திருக்கும் தேசிய அரசின் ஊடாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகளின் ஒன்றிணைப்பு நல்லதொரு வெற்றிப்பாதையினை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர வேண்டிய தேவை உள்ளது.
யுத்தம் முடிவடைந்து நாட்டில் பயங்கரவாதம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டிருந்தம் நாட்டின் தேவையான அபிவிருத்தி எவையும் இடம்பெறவில்லை. நாட்டினை பாதுகாப்பான பாதையில் கொண்டு செல்வதாயின் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-VK-