Breaking
Wed. Oct 30th, 2024

அன்பு செலுத்துவதே அற்புதம்தான் எனினும், மனிதனுக்கு மற்ற உயிரினங்களின் மீது உண்டாகும் அன்பு ’அதீத’ அற்புதமானது. ’அங்கிள் ஆப்டோ’ என்று அழைக்கப்படும் முதியவருக்கும் ஒரு சுவற்றுக்குள் சிறைபட்டிருந்த பூனைக்குமான உறவு அப்படிப்பட்ட ஒரு அதீத அற்புதம்.

2010-ம் ஆண்டு தனது பென்சன் பணத்தை வாங்கச் செல்வதற்காக எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வந்த ஆப்டோ, ஒரு பூனை பசியில் கத்தும் சத்தத்தைக் கேட்டார். ஆனால் கண்ணுக்குத் தெரிந்து அங்கு ஒரு பூனையும் இல்லாததைக் கண்டு திகைத்தார். சந்தேகமடைந்து, சத்தம் கேட்ட இடத்தை நோக்கி நகர்ந்த போது, சுவற்றுக்குள்ளிருந்து ஒரு குட்டிப்பூனையின் வால் மட்டும் வெளியே தெரியும்படி, அசைந்து கொண்டிருந்தது.

உடனே, என்ன செய்வதென்று புரியாமல் அதற்கு சுவற்றில் இருந்த இடைவெளி வழியாக கொஞ்சம் தண்ணீர் கொடுத்தார். அன்று ஒரு நாள் மட்டுமல்ல, தினமும் அந்தக் குட்டிப்பூனைக்கு உணவளிப்பதற்காகவே ரெயில் நிலையத்திற்கு வர ஆரம்பித்தார். ஆரம்பத்தில் இவரைக் கிறுக்கனாகப் பார்த்த ரெயில்வே நிலைய வாசிகள் போகப் போக இவரது அன்பைப் புரிந்து கொண்டு அவர்களும் உதவி செய்ய ஆரம்பித்து விட்டனர்.

இதற்கிடையில் அந்தப் பூனைக்கு செல்லமாய் ’பிசோ’ என்று பெயர் வைத்த ’ஆப்டோ’ சுவரை உடைத்து பூனையை வெளியே கொண்டு வர நினைத்தார். ஆனால் அது அரசுக்கு சொந்தமான இடம், எகிப்து சட்டம் அதை அனுமதிக்காது.

பல முறை சுவற்றில் உள்ள இடைவெளியின் வழியாக பிசோவை மீட்க முயற்சி செய்வார், ஆனால் இருட்டுக்குள்ளே இருந்து பயந்து போன பூனை மீண்டும் சுவற்றுக்கு உள்ளேயே சென்று ஒளிந்து கொள்ளும், இதனால் கொஞ்சம் சலிப்படைந்தாலும், பிசோவை எப்போதும் போல நன்றாகவே பார்த்துக் கொண்டார் ஆப்டோ.

இப்படியே 5 வருடங்கள் கரைந்த நிலையில், சமீபத்தில் சுவற்றுக்கு வெளியே தெரியும் பிசோவின் வளர்ந்த வாலைப் புகைப்படமெடுத்து அதை பேஸ்புக்கில் பதிவேற்றி நூதன போராட்டம் ஒன்று நடைபெற்றது. பேஸ்புக் மூலமாக பிராணிகள் நல ஆர்வலர்கள் இதை அறிந்த பிறகுதான் பிசோவின் வாழ்க்கையில் முதன் முதலாக வெளிச்சம் வந்தது. 5 மணி நேரமாகப் போராடி பிசோவை மீட்டுள்ளனர்.

பேரன்பு ஒரு போதும் தோற்காது…..,

Related Post