19வது திருத்தச் சட்ட மூல ஆவணம் தொடர்பாக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (06) நிறைவுக்கு வந்துள்ளது.
மனு விசாரணையின் தீர்ப்பு இரகசியமாக சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
இந்த சட்டமூல ஆவணத்திற்கு எதிராக 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்றைய இறுதி விசாரணையில் சட்ட மா அதிபர் கருத்து முன்வைத்துள்ளார்.
இந்த சட்டமூலம் மக்கள் தீர்ப்புக்கு விடப்படாமல் பாராளுமன்றில் மூன்று இரண்டு பெரும்பான்மை பெற்று நிறைவேற்றப்பட வேண்டும் என சட்ட மா அதிபர் கருத்துரைத்துள்ளார்.
தேசிய ஒற்றுமையின் அடையாளமாக இந்த சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ´ஜனாதிபதி´ கூறியுள்ளதாக பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தெரிவித்தார்.
ஆனால் தேசிய ஒற்றுமையின் அடையாளமாக ´தேசிய கொடி´ இருக்கும் போது ´ஜனாதிபதி´ இவ்வாறு கூறியமை தொடர்பில் கவனம் செலுத்துமாறு பிரதம நீதியரசர், சட்ட மா அதிபரிடம் கேட்டுக் கொண்டார்.
அமைச்சரவையின் பிரதானியாக பிரதமர் நியமிக்கப்படும் போது அங்கு ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்படுவதில்லையா என்று பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் கேள்வி எழுப்பிதாக நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
மக்களால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட நிறைவேற்று அதிகாரத்தை மற்றொருவர் அனுபவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியுமா என்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு பிரதம நீதியரசர், சட்ட மா அதிபரிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த சரத்து மூலம் ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்பட மாட்டதென சட்ட மா அதிபர் பதில் அளித்தார். (ad)